வார்த்தைகளைப் பரிமாறுவதில் கவனமாய் இருப்போம் !

கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென பேச்சு முற்றிப்போய் வாக்குவாதமாயிற்று. கணவன் சண்டையில் “தரித்திரமே” என்று சொல்ல மனைவிக்கு சுருக்’கென்று ஆகியது. மறுநாள் காலையில் மனைவி எந்திரிக்கவே இல்லை. நேற்று நடந்த சண்டையில் கோபமாய் இருப்பாள் என்று நினைத்து கணவன் சமையலறைக்கு சென்றான்.
எந்த அலமாரியில் எதை வைத்திருக்கிறாளோ என்று தெரியாமல் குழம்பிப் போனான். அலுவலகத்திற்கு செல்ல நேரமும் ஆகியது. சாயங்காலம் சரியாகி விடுவாள் என்று மனதில் எண்ணியவாறே அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
திரும்ப வீட்டிற்கு வருவதற்கு இரவு ஆகியது. மனைவி எந்திரிக்கவே இல்லை. பயத்தில் அழைத்துப் பார்த்தான். பசி மயக்கத்தில் இருந்தாள் மனைவி.
இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏதாவது சமைத்துக் கொடுக்கலாம் என்று சமையலறைக்கு சென்றவனுக்கு அடுப்பை பற்ற வைக்கக் கூடத் தெரியவில்லை.
மனைவியிடமே கேட்கலாம் என்று சென்றான். மனைவி பேசுவதாய் இல்லை. குழப்பத்திலேயே நடந்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் மனைவி எழுந்து இப்போது நீங்கள் சொன்னது சரியாக இருக்கும் இனிமேல் என்னை ‘தரித்திரம்’ என்றே அழைக்கலாம் என்று கூறினாள்.
இதைக் கேட்ட கணவனும் என்னைத் திருமணம் செய்த பிறகுதான் வறுமையை உணர்ந்திருக்கிறாள் என்றெண்ணி கூனிக்குறுகிப் போனான்.
என்னதான் பிரச்சினையாக இருந்தாலும் பட்டினியில் வாடிய அனுபவம் அவளுக்கு இல்லை. பெண்கள் வீட்டில் எவ்வளவு துயரங்களை அனுபவித்தாலும், தங்கள் பெற்றோருக்கு அவர்கள் இரு கண்கள் போலவே வளர்ந்திருப்பார்கள்.
எவ்வளவு வசதி வாய்ப்புகளோடு கணவன் வீட்டில் வாழ்ந்தாலும் தனக்கென்று எதுவுமே இல்லை என்ற வெ(வ)றுமையை கொடுக்க நினைக்காதீர்கள்.
அர்த்தம் தெரியாமல் கோபத்தில் நம் வாய் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் பிற்காலத்தில் நம்மை மிகவும் யோசிக்க வைக்கும். பேசியவர்கள் மறக்கலாம் - ஆனால் அதைக் கேட்போருக்கு என்றும் மாறா வடு’வாக மாறிவிடும். வார்த்தைகளைப் பரிமாறுவதில் கவனமாய் இருப்போம்!
[தரித்திரம் என்ற சொல் ‘தாரித்ரியம்’ என்ற வடமொழி சொல்லின் திரிபு. வறுமை என்பது இதன் பொருள்]
(வீடியோ இங்கே )
அனுசரணை



