நைஜீரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வணிக தலைநகரம் லாகோஸ். அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஆப்ரிலேண்ட் டவர் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தின் 4-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. எனவே அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து வணிக வளாகத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பலரும் தப்பிக்க முயன்றனர். இதில் பலருக்கு கை, கால்கள் முறிந்தன.
மற்றொருபுறம் வணிக வளாகத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பலியானோருக்கு அதிபர் போலா டினுபு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )



