ஜனாதிபதி வடக்கிற்குச் சென்ற நிலையில் மன்னார் மக்களின் போராட்ட களம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அதே நாளில் பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மன்னார் தீவில் இரண்டு புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஓகஸ்ட் 2, 2025 அன்று மன்னார் நகரில் ஆரம்பமான போராட்டத்தில் இணைந்த சிவில் ஆர்வலர் எஸ்.ஆர். குமரேஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என நேற்றைய தினம் (செப்டெம்பர் 01) தெரிவித்தார்.
“இந்த காற்றாலையால் மன்னார் தீவு இன்று அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தீவில் வாழும் 75,000 மக்களும் இடம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்படப்போகிறது. அந்த மக்கள் இடம்பெயர்ந்து பெரு நிலப்பரப்பில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இவ்வாறான அழிவுகளை நிறுத்த வேண்டும். காற்றாலைக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும்.”
மன்னார் தீவில் மேலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டால், ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தீவின் மக்கள் வேறு இடங்கனுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டும் சிவில் சமூக ஆர்வலர், இது போர் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்கனவே காணிப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள வடக்கு மக்களுக்கு இடையில் ஒரு மோதலை ஏற்படுத்தும் என வலியுறுத்துகின்றார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனவும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மன்னார் ஒரு சொர்க்கம் அல்ல என எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரலின் பின்னர் மன்னார் தீவில் ஆரம்பிக்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவாட் காற்றாலைத் திட்டம் இரண்டு ஆகியவற்றிள் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.
மன்னார் தீவில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிராக ஓகஸ்ட் 11ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த பிரதேச மக்கள், மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினர்.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தி நிலைய விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் மன்னார் பிரதான பாலத்தின் அருகே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு, மேலும் அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்க பொலிஸார் நிறுத்தப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். மன்னார் பகுதியில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஓகஸ்ட் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதோடு, கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.
ஒரு மாதத்தைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், பொது அமைப்புகள் காற்றாலை திட்டங்களை மீளப்பெறும் வரை போராட்டை நிறுத்தப்போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



