சுவிற்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த வயோதிபருக்கு நேர்ந்த கதி

சுவிசில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்தவரின்,சுமார் 14 மில்லியன் ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட 8 பேரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிசில் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற வயோதிபர் ஒருவர் , ஓய்வு கொடுப்பனவான பெருந்தொகை பணத்துடன், தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட சுமார் 14 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணத்தை வைத்திருந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் , தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும் , அவற்றினை நண்பர்கள் , தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு நாணயங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் மாற்றியதாகவும் கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை , திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 06 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 08 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, திருடப்பட்ட 7.5 மில்லியன் ரூபா பணம் , 09 ஆயிரம் சுவிஸ் பிராங் , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்று , அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



