சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பலர் இரங்கல்!

#SriLanka #R. Sampanthan #Death
Mayoorikka
1 year ago
சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பலர் இரங்கல்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது 91 ஆவது வயதில் காலமானார்.

 உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

 1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும் போது அவருக்கு 91வயதாகும். இந்நிலையில், மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இரங்கல் !

 அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய திரு சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு இன்று ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் இரங்கல் !

 தமிழ்ச் சமூகத்தின் அசைக்க முடியாத அரசியவாதியும் உயர்ந்த ஆளுமையுமான ஆர்.சம்பந்தனின் மறைவு ஆழ்ந்த கவலலை அளிக்கிறது. ஜனநாயகம் மற்றும் அதிகாரப் பகிர்வு மீதான அவரது உறுதியான நம்பிக்கை, எப்போதும் "பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள்" என்றென்றும் எதிரொலிக்கும். 

அவரது நினைவாக, அனைத்து இலங்கையர்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப பாடுபடுவோம், நமது பன்முகத்தன்மையை வலிமையின் ஆதாரமாக ஏற்றுக்கொள்வோம். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரங்கல் !

 “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அவர் எனது நீண்டகால நண்பர் நாங்கள் கடந்த பல காலங்களாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒரு பாரிய இழப்பாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.

 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இரங்கல் !

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இரங்கல்!

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

 இரங்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் இரங்கல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்திய இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்காண அயராது உழைத்து வந்தவருமான இரா. சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் குகதாதன் தெரிவித்தார்.

 சம்பந்தன் ஐயாவின் பிரிவால் வாடும் அவரது மனைவி , மக்கள், மருமகள் ,பேரன் உள்ளிட்ட உற்றார் உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில் இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா இரங்கல்!

 இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.சம்பந்தன் மிகவும் மூத்த அரசியல்வாதி. அவரது இழப்பு பெரிதும் உணரப்படும்.” என பதிவிட்டுள்ளார்.

அங்கஜன் இராமநாதன் இரங்கல்!

 தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தனின் மறைவு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும் என சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

 அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் அவர். தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது.

 வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியையும், வேறுபட்ட நீரோட்டங்களில் பயணித்த கட்சிகளின் கூட்டமைப்பையும் தனது இயலுமைக்காலங்கள் அனைத்திலும் தன் ஆளுமையால் சிதைவடையாது காப்பாற்றியதில் அவருக்கு இணை அவர் மட்டுமே.

 இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றின் நீண்டகால அனுபவப் பக்கமொன்றை எங்கள் இனம் இன்று இழந்துள்ளது. அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!