தியாகியின் அரும் சேவை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கிடைத்ததா?

நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த நேரத்தில் ஊடகங்கள் தமது பிரபலத்துக்காக சமூகத்துக்கு ஆக்க முயல்வனவற்றை விடுத்து அழிக்க முயல்கின்ற செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது வேதனையைத் தருகின்றது.
இதனால் எமது சமூகம் பெருமளவு இழப்பைச் சந்திக்கின்றது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். - இவ்வாறு மிகவும் வேதனையுடன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன்.
பல்வேறு சழூக செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி அளப்பெரும் மக்கள்சேவை ஆற்றிய கொடை வள்ளல் தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவன் தொடர்பில் அவரைப் பற்றி வெளிவந்த விமர்சனங்களால் அவரது சமூக சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாகவே அவர் இவ்வாறான ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவன் ஐயா அவர்கள் சாதாரண மக்கள் சேவையை விடுத்து, எமது வடமாகாணத்தின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் அளப்பெரும் சேவையாற்றிய ஒரு பெருந்தகை.
சுகாதார அமைச்சால் நிதிப்பிரச்சினையால் ஆற்றமுடியாது உள்ள பல விடயங்களை இவர் எந்த ஆடம்பரமுமில்லாமல் எத்தனையோ ஆயிரக் கணக்கான நோயாளர்கள் பயன்பெறும் அளவுக்கு ஆற்றிய வள்ளல்.
இன்றைக்கு அவர்மீது எழுந்துள்ள விமர்சனத்தால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளானதால் தனது அத்தனை சமூகப் பணிகளையும் இடைநிறுத்தியுள்ளார். எந்த ஊடகங்களுக்குமே தெரியாமல் அவர் தினமும் பல ஆயிரம் நோயாளர்கள் பயன்பெறும் அளவுக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு ஆற்றும் சேவைகளை, அதன் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொறுப்புள்ள செயலாளர் என்ற அடிப்படையில் அவரால் கிடைக்கப்பெற்ற சேவைகளை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்செல்வதால் எமது சங்கத்தால் இவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 'தியாகேந்திரன் கிளினிக் சென்றர்' என்ற கிளினிக் தொகுதியை 80 லட்சம் ரூபாவுக்கு நவீன வசதிகளுடன் அமைத்துத் தந்தார்.
இதனால் கிழமை நாள்களில் 500 பேர் வரையிலான நோயாளர்கள் பயன்பெறுகின்றார்கள். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு சமையலாளரை எமது நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் நியமித்து அவர்கள் இருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா வீதம் இருவருக்கும் மாதா மாதம் 60 ஆயிரம் ரூபாவை ஒவ்வொரு மாதமும் வழங்கினார்.
இன்று இவர்களின் விமர்சனத்தால் அவர் மனமுடைந்து அந்தக் கொடுப்பனவை நிறுத்தியுள்ளார். இதனால் விடுதிகளில் இருந்து சிகிச்சை பெறுகின்ற எத்தனையோ புற்றுநோயாளர்கள், மனநோயாளர்கள் உள்ளிட்ட நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை ஆண்கள் விடுதியின் மல சல கூடம், சமையலறை உட்பட நோயாளர்களுக்கு அதிமுக்கியமான பல்வேறு திருத்தவேலைகளுடன் நவீனமயப்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபா வரையில் தேவைப்படுவதாக அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
அவர் அதற்கான சம்மதத்தை வழங்கி, வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவர்பற்றிய விமர்சனத்தை இவர்கள் கிளப்பிவிட்டார்கள். இதனால், அவர் ஆற்றவிருந்த அந்த வேலைகளும் தடைப்பட்டுப் போயுள்ளன.
சில ஊடகவியலாளர்கள் சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை நோக்காது, தமது சனலை பிரபல்யப்படுத்துவதற்காக சேவையாளர்கள் மீதான மறுபக்கத்தை நோக்கி சமூகத்துக்கு எவருக்குமே தெரியாமல் கிடைக்கின்ற எத்தனையோ விடயங்கள் தடைப்பட்டுப் போகின்றன.
இதில் நான் குறிப்பிட்ட விடயங்கள் நான் செயலாளராகக் கடமையாற்றுகின்ற தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இவரால் கிடைக்கப்பெற்ற எனக்குத் தெரிந்த விடயங்கள் மட்டுமே.
தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு எனக்குத் தெரியாமல் அங்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்திய அத்தியட்சகர்களாக இருப்பவர்கள், தாதிய சேவையாளர் என இவரிடம் எவ்வளவோ உதவிகளைப் பெற்றிருக்கலாம்.
இதனை விட, யாழ்.போதனா வைத்தியசாலை, மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்கள், கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் என்று இவருடன் பயன் பெறுபவை ஏராளம்.
ஆகவே, ஊடகங்கள் சமூகம் நோக்கிய பார்வை இருக்கவேண்டும். எமது மண்ணில் பணம் படைத்தவர்கள் ஏராளம். ஆனால், பிறக்கும் போதே கொடைக் குணம் படைத்தவர்கள் அரிதிலும் அரிதே. எல்லா மனிதர்களிலும் சக, சய இரு பக்கங்களும் உள்ளன. நல்ல சேவைகளை போற்றவேண்டும்.
தீய பக்கங்களை கண்டுகொள்ளக்கூடாது. இந்துக்களின் ஆன்மீகப் பதிகங்களில் கூறப்படுகின்றமை போன்று 'வாயே வாழ்த்துக் கண்டாய்...'' என்பதற்கிணங்க நல்ல ஆரோக்கியமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பனவாக எமது வடக்கு ஊடகங்கள் இருக்கவேண்டும். சமூகத்துக்கு பயனுள்ள விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றுள்ளது.
இதுமட்டுமன்றி தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவன் அவர்கள் நாட்டு மக்களுக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளார்.
போர் காலத்திலும் போர் முடிந்த பிற்பாடும் இவரது சேவை தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவரின் 50 வருட சேவைகளின் ஒரு சில துளிகளை கீழே தருகின்றோம்:
பால்பண்ணை அமைத்து கொடுத்தல்,ஈம கிரியைகள் செய்து கொடுத்தல் , ஆயிரக்கணக்கான ஆரம்ப பள்ளி பாடசாலைகளில் கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு இவர் தனிப்பட்ட முறையில் சம்பளம் வழங்கியுள்ளார்.
மேலும் புற்றுநோய் , சிறுநீரகச் செயலிழப்பு , மகப்பேறு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் ,மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கும் இவரின் அறக்கட்டளை ஊடாக சேவை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறைந்தது 200 - 300 பேருக்கு உலர் உணவு பொருட்களை வழங்கியுள்ளார்.
மேலும் தென்னிந்திய இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை சிறுமிகளுக்கும் மற்றும் அவர்களுடன் பங்கேற்ற இந்திய சிறுவர்கள் பலருக்கும் இவர் உதவி செய்துள்ளார்.
மேலும் இலங்கை மட்டுமின்றி இந்தியா , ஆப்பிரிக்கா , சுவிஸ் , பங்களாதேஷ் போன்ற பிற நாடுகளுக்கும் ஐயா தியாகேந்திரன் வாமதேவன் அவர்கள் தனது சிறப்பான சேவையை ஆற்றியுள்ளார்.
மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கும் உதவிபுரிந்துள்ளார்.
பல்வேறு பிரதேசங்களில் உள்ள திறமையான வீரர்களுக்காக விளையாட்டு மைதானம் மற்றும் பார்வையாளர் அரங்கு செய்ய உதவியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை வழங்கியுள்ளார்.



