சட்டத்தினை அமுல்படுத்துபவர்களே சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர்!

சித்திரவதைக்குள்ளானவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும் எதிர்காலத்தில் இவ்வாறான கொடுரமான செயல்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்வதும் நமது கூட்டு பொறுப்பாகும் என வாழ்வதற்கான உரிமை அமைப்பு right to life srilanka தெரிவித்துள்ளது.
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச ஆதரவு தினமான இன்று இது குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே வாழ்வதற்கான உரிமை அமைப்பு இதனை தெரிவித்துள்ளது வாழ்வதற்கான உரிமை அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச ஆதரவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் இலங்கையில் சித்திரவதைகளிற்கு எதிரான சட்டங்கள் விதிமுறைகளை பயனளிக்க கூடிய விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவேண்டியது கட்டாயமாகின்றது.
மாத்தறை நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமீபத்தைய தீர்ப்பு இதற்கான தேவையை வெளிப்படுத்தியுள்ளது. திஸ்ஸமஹராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மூவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
2003 இல் ஐவரை கடத்தி சித்திரவதை செய்தமைக்காக இவர்களிற்கு எதிராக ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு எதிராக நீதிமன்றம் அபராதம் விதித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களிற்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது. இதன் மூலம் நீதிமன்றம் மனித உரிமை மீறல்களிற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை வலியுறுத்தியது. 1994ம் ஆண்டின் 22 இலக்க சித்திரவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும் அறிக்கைகளும் ஆய்வுகளும் சித்திரவதை என்பது இலங்கையின் சட்டஅமுலாக்கல் அமைப்புகள் மத்தியில் தொடர்ந்து காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளன.
மேற்குறிப்பிட்ட சட்டம் சித்திரவதையை குற்றமாக்கியுள்ளதுடன் அவ்வாறான செயற்பாடுகளிற்கு கடும் தண்டனையை வழங்கவேண்டும் என ஆணையிட்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான ஐக்கியநாடுகளின் சமவாயத்தினை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட இந்த சட்டம் சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களிற்கு ஏழு முதல் 10 வருடசிறைத்தண்டனையை வழங்குகின்றது.
எனினும் இந்த சட்டத்தினை பின்பற்றுதல் அதனை அமுல்படுத்துவதில் இலங்கை தொடர்ந்து தடுமாறுகின்றது,பொலிஸாரின் ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் பல வழக்குகள் மூலம் வெளியாகியுள்ளதால் இந்த உண்மை தெரியவந்துள்ளது. சமீபத்தைய தீர்ப்பு ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தவேண்டிய தேவையை அவசியத்தை நினைவூட்டுகின்றது,மேலும் பொலிஸ் துஸ்பிரயோகங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுயாதீன அமைப்பொன்றை உருவாக்கவேண்டியதன் அவசியத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது.
சித்திரவதைகளை தடுப்பதற்கும் அனைவரினதும் மனித உரிமைகளையும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் இவ்வாறான நடவடிக்கைகள் அவசியம். அண்மையில் மதவாச்சி பொலிஸார் தொடர்பாக இடம்பெற்ற சம்பவம் இந்த விவகாரத்தின் அவசரமான பாரதூரதன்மையை வெளிப்படுத்தியுள்ளது. வாகனத்தை நிறுத்திய விவகாரம் தொடர்பில் 23 வயது இளைஞன் ஒருவன் பொலிஸாரினால் மிக மோசமாக தாக்கப்பட்டான்,இதன் காரணமாக அந்த இளைஞன் குருதிபெருக்கால் பாதிக்கப்பட்டான் அவனது விரைகளில் ஒன்றை அகற்றவேண்டிய நிலையேற்பட்டது தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இலங்கையில் வலுவானவிதத்தில் சித்திரவதைக்கு எதிரான நடவடிக்கைகளை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது. 2011 முதல் 2017 வரை இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சித்திரவதைகள் தொடர்பான 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த பிரச்சினை எவ்வளவு பரவலானது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. சித்திரவதைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் சட்டமா அதிபர் 115 பேருக்கு எதிராக வழக்குகளை தாக்கல்செய்துள்ளார்-35 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்த புள்ளிவிபரம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான தொடரும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச ஆதரவுதினத்தை நாங்கள் இன்று கடைப்பிடிக்கும் அதேவேளை இலங்கை அரசாங்கமும் நீதித்துறையும் சித்திரவதையை ஒழிப்பதற்கான அனைத்து பிரஜைகளினதும் கௌரவம் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள் இதுவாகும்.
சித்திரவதைக்குள்ளானவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும் எதிர்காலத்தில் இவ்வாறான கொடுரமான செயல்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்வதும் நமது கூட்டு பொறுப்பாகும்,இதற்கு சட்டங்களின் கடுமையான பயன்பாடு மாத்திரம் போதுமானதல்ல,கல்வி பயிற்சி சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் மேற்பார்வை போன்றவற்றை வலுப்படுத்துவதன் மூலம் நடவடிக்கைகளை எடுக்கலாம்.



