B. H. அப்துல் ஹமீத் விவகாரம்: பிரதான ஊடகங்கள் மீது ஏன் குற்றச்சாட்டு?

#SriLanka #Media
Mayoorikka
1 year ago
B. H. அப்துல் ஹமீத் விவகாரம்: பிரதான ஊடகங்கள் மீது ஏன் குற்றச்சாட்டு?

B. H. அப்துல் ஹமீத் தொடர்பாக வட்ஸ்அப் மற்றும் சமூகவலைத் தளங்களில் திட்டமிட்டுப் பரவவிடப்பட்ட தகவல் மன்னிக்க முடியாத குற்றம்- ஆனால் அக் குற்றத்தை மரபு வழி பிரதான ஊடகங்கள் (Mainstream Media) குறிப்பாக நாளிதழ்கள், முகவரியுள்ள செய்தி இணையத் தளங்கள், மற்றும் தொலைக்காட்சி, வானொலி ஆகிய இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தின் மீதும் சுமத்தியிருப்பது திட்டமிடப்பட்ட ஆபத்தான சூழ்ச்சிக் கோட்பாடு.

 ”I am alive, but Media ethics is dead” (நான் உயிருடன் இருக்கிறேன் ஆனால் ஊடக நெறிமுறைகள் இறந்துவிட்டன) என்று அப்துல் ஹமீத் சொன்னதாக ஆங்கிலத்திலச் செய்தியின் தலைப்பு ஒன்றை அவதானிக்க முடிந்தது. ஆனால் அத் தலைப்பின் கீழான செய்தியில் அப்துல் ஹமீட் அவ்வாறு சொன்னதாகத் தெரியவில்லை. அவர் அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பும் இல்லை. 

 ஏனெனில் ”பிரதான ஊடகங்கள்” சமூக வலைத்தளங்கள்” என்ற இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை அப்துல் ஹமீத் அறியாதவரல்ல. அச் செய்தியின் தலைப்பு மாத்திரமே அவ்வாறு இருந்தது. மேற்படி ஆங்கில செய்தி மாத்திரமல்ல, வேறு சில இணையங்களிலும் ”அப்துல் ஹமீட் மரணிக்கவில்லை. ஊடக ஒழுக்கங்கள் இறந்துவிட்டன” என்ற தொனியில் தகவல்களைக் காண முடிந்தது.

 இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில்---- அப்துல் ஹமீத் மரணிக்கவில்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தி உடனடியாகச் செய்தி வெளியிட்டது முகவரியுள்ள செய்தி இணையத் தளங்கள்தான். நாளிதழ்கள், இலத்திரனயில் ஊடகங்கள், செய்தி இணையத் தளங்கள் எதிலும் அப்துல் ஹமீத் இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளிவரவேயில்லை. 

 சமூகவலைத் தளங்கள் ஊடகங்கள் அல்ல. அதில் வெளியிடப்படும் கருத்துகள், தகவல்கள் போன்றவற்றுக்கு பிரதான செய்தி ஊடகங்கள் பொறுப்புமல்ல. சமூகவலைத் தளங்களை எவரும் வைத்திருக்கலாம். அதற்கு அனுமதி எதுவும் தேவையேயில்லை. ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக செய்தித் துறையில் இருப்பவர்கள் சமூகவலைத் தளங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தாலும், அவர்கள் பொறுப்பற்ற முறையில் இப்படியான தவறான தகவல்களை பரப்பமாட்டார்கள்.

 ஏனெனில் ஊடக ஒழுக்க நெறிகளுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள். (ஒரு சிலர் விதிவிலக்கு) அதற்காக ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் ”தவறுகள்” ”பிழைகள்” விடுவதில்லை என்று இங்கு நான் வாதிட வரவில்லை. சில சந்தர்ப்பங்களில் ”தவறுகள்” ”பிழைகள்” வருவது இயல்புதான். நாளிதழ்களில் பிழைகள் ஏற்பட்டால் அதனை ஊடக மொழியில் ”அச்சுப் பிசாசு” என்று அழைப்பர். 

 ஆனால் வேண்டுமென்று திட்டமிட்டு ஒருவருடைய உயிரோடு விளையாடும் அல்லது ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை பிரதான ஊடகங்கள் பிரசுரிப்பதில்லை. அப்படித் தவறான செய்தி பிரசுரமாகிவிட்டால் மறு விளக்கம் அல்லது மன்னிப்புக் கேட்கும் பண்பு ஊடகங்களிடம் உண்டு. குறிப்பாக மரபுவழி நாளிதழ்களில் இப் பண்பு கட்டாயமானது. 

 ஆனால் அப்படியான பண்புகளைச் சமூகவலைத் தளங்களிலும் சில செய்தி இணையத் தளங்களிலும் எதிர்பார்க்க முடியாது. 

அதுவும் 2009 இற்குப் பின்னரான சூழலில். ஆகவே மரபு வழி பிரதான ஊடகங்களுக்கும் சமூகவலைத் தளங்களுக்கும் வேறுபாடுகள் தெரியாமல் பொதுப் பார்வையில் பிரதான ஊடகங்களைக் குற்றம் சுமத்துவதை அனுமதிக்க முடியாது. அது பற்றிய உரிய புரிதலை வழங்க எனக்கு உரிமை உண்டு.

 சம்பந்தப்பட்டவர்கள் (Those Involved) தாழ்மையோடு புரிந்துகொள்ள வேண்டும்.

 -அ.நிக்ஸன்-

 பத்திரிகையாளர் ஊடக விரிவுரையாளர்

 கொழும்பு -06

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!