சபாநாயகரிடம் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ள விஜயதாஷ ராஜபக்ஷ!

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கும் இரண்டு நீதிபதிகளையும் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிற்கு அழைத்து பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நீதியமைச்சரின் அரசியல் இருப்புக்கு சவால் விடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளால் அதிருப்தியடைந்த திரு.விஜயதாச ராஜபக்ஷ, பக்கச்சார்பற்ற நீதிபதிகளை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நீதிச்சேவை சங்கம் அறிவித்துள்ளது.
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் விமர்சித்து வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துக்களால் நீதித்துறையின் சுதந்திரம் பகிரங்கமாக சவால் செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த அறிவிப்பு தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இலக்கம் 328 மூலம் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவது தடுக்கப்பட்ட போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதிச்சேவை சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான அறிவிப்பில் இடம்பெற்றுள்ள அறிக்கைகள் தமது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.



