தங்களின் விவசாய நிலங்களை மீள பெற்றுத்தருமாறு கோரும் மன்னார் மக்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தங்களின் விவசாய நிலங்களை மீள பெற்றுத்தருமாறு கோரும் மன்னார் மக்கள்!

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. மீள் குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாக பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதில் உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறி முறைகளுக்கான இடைக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் உத்தேச சட்ட வரைவு நிறுவுவதற்கு ஜனாதிபதியின் ஏற்பாட்டில் குறித்த குழு இன்றைய தினம் (25.06) மன்னருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.  

இதன்போது மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். 

இதன் போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து குறித்த குழுவினர் கலந்துரையாடி உள்ளனர். இதன் போதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த குழுவினரிடம் இந்தபிரச்சினையை முன் வைத்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது.மீள்குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாக பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதில் உள்ளது.  

மன்னார் மாவட்டத்தில் முக்கியமான வாழ்வாதார செயல்பாடாக விவசாயம் காணப்படுகின்றது. விவசாயத்தை விருத்தி செய்ய பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம்.  

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வன வள திணைக்களம்,வன ஜீவராசிகள் திணைக்களம் கிட்டத்தட்ட 36 வீதம் காணிகளை பிடித்துள்ளனர். மேலதிகமாக புதிதாக 30 வீத காடுகளை உருவாக்கி உள்ளனர்.

இவர்கள் ஜீ.பி.எஸ். மற்றும் கூகுள் படம் ஊடாக கூடுதலான நூறுக்கு மேற்பட்ட விவசாய குளங்களை தமது எல்லைக்குள் அடையாளப்படுத்தி உள்ளமையினால் விவசாய அபிவிருத்தியை புனரமைப்பு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.  

இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய பின்னர் தமது விவசாய நிலங்களை மீள பெற்றுத்தருமாறு கோருகின்றனர். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட விவசாய நிலங்கள் தற்போது வன வள திணைக்களத்திடம் இருந்து மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.  

இதனால் மீள்குடியேறி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அடிப்படையில் அவர்களின் நிலங்களை மீள வழங்குவதில் நாங்கள் சவால்களை எதிர் நோக்குகிறோம்.1980 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்ததன் காரணமாக பொது மக்களினால் பயன்படுத்தப்பட்ட இடங்கள் கூட சிறு காடுகளாக காணப்படுகிறது.  

இதன் காரணமாக 12 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை குறித்த திணைக்களத்திடம் உரிய ஆதாரத்துடன் சமர்ப்பித்து பொது மக்களின் 1500 ஹெக் டயர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களினால் அடையாளம் காணப்பட்ட ஏனைய நிலங்களை விடுவிக்க முடியாத நிலை காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த குழுவினர் அரச அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உட்பட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உத்தேச சட்ட வரைவு குறித்து கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!