திருமண விளம்பரம் மூலம் பண மோசடி: இராணுவ மேஜர் ஒருவர் கைது

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்ட நபரொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஆங்கில நாளிதழ்களில் திருமண விளம்பரமொன்றை வெளியிட்டு பண மோசடி செய்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது .
சந்தேக நபர் இந்த மோசடிக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், ரவுட்டர் மற்றும் மடிக்கணினி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற 28 வயதுடைய ஒரே மகனின் தந்தை எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சந்தேக நபர், மணமகள் தேவை என்ற விளம்பரம் ஒன்றினை வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியொருவரின் தாய் ஒருவர் இந்த விளம்பரத்தைப் பார்த்து விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு விடுத்து இது தொடர்பில் சந்தேக நபரிடம் கலந்துரையாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த தாயார், சந்தேக நபரிடம் தங்கள் மகனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் வழியாக அனுப்புமாறு கேட்டுள்ளதுடன் சந்தேக நபர் இளைஞன் ஒருவரின் புகைப்படத்தைக் குறித்த தாயாருக்கு அனுப்பியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



