2022 போராட்டத்தின் போது புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றதா? : நீதிமன்றம் கேள்வி!
2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானில் உள்ள தனியார் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, செயற்பாட்டாளர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையின் போது, நீதியரசர் யசந்த கோதாகொட அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அவர்கள் மீது நேற்று (18.06) விசாரணைகள் நடைபெற்றன.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்கும் போது அது தொடர்பான போராட்டம் எவ்வாறு ஆரம்பமானது என்பதை விளக்கியுள்ளார்.
அப்போது, அரசு சட்டத்தரணியிடம் கேள்வியொன்றை முன்வைத்த நீதிபதி யசந்த கோதாகொட, போராட்டம் தொடங்குவதற்கு முன், அது தொடர்பான தகவல்கள் புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்ததா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி, இவ்வாறான புலனாய்வுத் தகவல்கள் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
அப்போது அரசு வழக்கறிஞர் இந்த போராட்டம் தொடர்பான வீடியோ நாடாக்களை திறந்த நீதிமன்றத்தில் காட்டி உண்மைகளை முன்வைத்தார். மேலும் மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மிரிஹானில் உள்ள அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்தைச் சுற்றியிருந்த போராட்டத்தின் போது பொலிஸார் தம்மை அநியாயமாக கைது செய்ததன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.