இன்று கூடும் பாராளுமன்றம் : விசேட அறிக்கையை வெளியிடும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18.06) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணைக்கான அங்கீகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட உள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரம் பாராளுமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற அமர்வானது இன்று (18.06) காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா சட்டத்தின் கீழும், அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழும், விளையாட்டு ஊக்கமருந்து தடைச் சட்டத்தின் கீழும் பல விதிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளன.



