ரயில் சேவைகள் தாமதமாகலாம்!

பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதால் தடைப்பட்டிருந்த கரையோரப் புகையிரதப் பாதை வழமைக்கு திரும்பியுள்ளது.
எவ்வாறாயினும், அந்த பாதையில் மேலும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (13) காலை பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகையிரதம் ஒன்று தடம் புரண்டதுடன், இதன் காரணமாக கரையோரப் பாதையில் புகையிரத சேவை தடைப்பட்டது. அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் ரயில் தடம் புரண்டது பதிவாகியுள்ளது.
இதேவேளை, புகையிரதம் தடம் புரண்டமையினால், மலையகப் பாதையில் இயங்கும் புகையிரத சேவையும் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயில் தலவாக்கலை மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



