விரைவில் 15 சட்டங்கள் நிறைவேற்றப்படும்

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நமது நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்பில், நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான மிகப்பாரிய சட்ட மறுசீரமைப்புகள் இடம்பெற்ற காலமாக இக்காலகட்டத்தைக் குறிப்பிடலாம். கடந்த 18 மாதங்களில் சுமார் 75 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது நாட்டில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும், முதன்மை வழக்கு நடவடிக்கை சட்டத்திற்குத் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான புதிய சட்டமூலமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை மாத்திரம் முன்வைத்து அந்த சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மேலும், தற்போது காதி நீதிமன்றம் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதன்படி, இரண்டு மாற்றங்களைச் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை கையாளும் வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்துவதற்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் பல திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட நீரியல் சட்டத்தை அடுத்த ஆண்டு அமுல்படுத்தலாம்.
இதன்மூலம் இந்நாட்டின் கடல் எல்லைகள் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மூலம் 50 மில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.



