தியாகி ஐயாவின் திடீர் முடிவு: சேவைகள் அனைத்தும் காலவரையறையின்றி நிறுத்தம்

தியாகி அறக்கொடை நிறுவனரும் TCT முதலாளியுமாகிய வாமதேவா தியாகேந்திரன் தனது அறக்கொடை சேவையை காலவரையின்றி இடைநிறுத்தியுள்ளதாக எமது ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் அவர் தன்னுடைய மகளுடைய பிறந்தநாளினை முன்னிட்டு பல கோடி ரூபாய் பெறுமதியான பணங்களையும் பொருட்களையும் கிட்டத்தட்ட 35,000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கி இருந்தார்.
அதனை அனுமதியோடும் அனுமதி இன்றியும் பல ஊடகங்கள் youtube சேனல்கள் பதிவு செய்திருந்தன அங்கே நிகழ்ந்த ஒரு சில விடயங்களை பெரிதாக்கி அதனை இழிவுபடுத்தி தங்களுடைய ஊடக வியாபாரத்தை செய்த ஒரு சில ஊடகங்கள் அந்த வீடியோக்களை மிகைப்படுத்தி அவர் மீது தேவையற்ற விமர்சனங்களை வாரி அள்ளி வீசி இருந்தனர்.
அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இதனை பொருட்படுத்தாது இந்த வாரம் திங்கட்கிழமை அன்று இந்தியாவிற்கு பல சேவைகளை செய்வதற்காக சென்றிருந்தார் அதாவது வேர்ல்ட் வுமன் பவுண்டேஷன் உடன் இணைந்து பல கல்வி சேவைகளை இலங்கையில் நிறுவுவதற்கான ஒரு திட்டத்தையும் கொண்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் அங்கு அழைக்கப்பட்டிருந்தார் அதன் பிற்பாடு ஈழ அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் சிலருக்கு தன்னுடைய கொடைகளை வழங்குவதற்காகவும் திட்டமிட்டு இருந்தார்.
இப்பொழுது இந்த அசம்பாவிதத்தினால் அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டு சற்று அவர்களுடைய மனநிலை துக்ககரமாக இருக்கின்ற காரணத்தினாலும் தற்சமயம் கால வரையறையின்றி தன்னுடைய கொடைகளை இடைநிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
இவர் தனது சொந்த பணத்திலேயே இவ்வளவு காலமும் அறக்கொடைப் பணிகளை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் தற்பொழுது தெல்லிப்பளை வைத்தியசாலையில் கான்சர் வார்டு நம்பர் 2 அமைத்துக் கொண்டிருக்கிறார் அந்த வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அத்தோடு சமையலறை மற்றும் மலசல கூடங்கள் என்று பல விடயங்களை அங்கே தன்னுடைய கொடையாக செய்து கொண்டிருக்கிறார்.
மற்றும் இருதய சத்திர சிகிச்சைக் கிளினிக் தெல்லிப்பளையில் அமைப்பதற்காக காணிகள் வாங்கி விடப்பட்டு அதன் வேலைகள் நடந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தினால் இவ்வாறான அனைத்து சேவைகளையும் உலகளாவிய ரீதியிலும் இலங்கை இந்தியா சுவிஸ் உட்பட அனைத்து இடங்களிலும் தனது சேவையை காலவரையின்றி இடைநிறுத்திக் கொள்வதாக அவர் எமக்கு குறிப்பிட்டு இருக்கின்றார்.
அவர் குறித்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அவருடைய சேவை தொடரும் வரை பயனாளிகள் பொறுத்திருக்க வேண்டும். இதேவேளை இவ்வாறான குறித்த சில சம்பவங்களினை மக்களின் நலன் கருதாமல் தங்களுடைய வருமானத்திற்காக செய்தியாக வெளியிடும் ஊடகங்களினால் பாதிக்கப்படுவது வறிய மக்களே.
எனவே இவ்வாறான ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடும் பொழுது மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து வெளியிடுவது காலத்தின் தேவையாகவும் உள்ளது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் உதவி செய்வதற்கு ஒருசிலரே உதவிக் கரம் நீட்டுகின்றனர்.
இந்தநிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு பிழைகளினை பெரிதாக்கி வெளியிடுவதினால் இனிமேலும் உதவி செய்ய விரும்புகின்றவர்களும் உதவி செய்யாமல் விடுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.
இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களும் உதவி தேவைப்படும் வறிய மக்களுமே ஆகும். எனவே ஊடகங்கள் பொறுப்புடன் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.



