10 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய இரு சிறுவர்கள் கைது!

வட்டவளையில் வீடொன்றில் இருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய குற்றச்சாட்டின் கீழ் 13 வயது இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (01.06) இடம்பெற்றுள்ளது.
கடந்த 28ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான பாடசாலை மாணவர்கள் இருவரும் தாம் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள மற்றுமொரு வீட்டின் கதவுகளைத் திறந்து வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட பணத்தில் கையடக்கத் தொலைபேசி, கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து, 08 புறாக்கள், அலங்கார மீன்களை வளர்ப்பதற்காக இரண்டு கண்ணாடித் தொட்டிகள் ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண மோசடி தொடர்பில் வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகத்திற்கிடமான இரு பாடசாலை மாணவர்களை பொலிஸார் காவலில் எடுத்து விசாரித்த போது திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட பணத்தில் 12,000 ரூபா பாடசாலை மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரிடமும் இருந்ததாகவும், மாணவர்கள் இருவரும் நண்பர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொலைபேசி கடையின் உரிமையாளர் சுமார் 20,000 ரூபா பெறுமதியான பயன்படுத்திய கையடக்க தொலைபேசியை சந்தேகத்திற்குரிய இரு பாடசாலை மாணவர்களுக்கு 80,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பாடசாலை மாணவர்களை ஏமாற்றி கையடக்கத் தொலைபேசியை அதிக விலைக்கு விற்பனை செய்த ஹட்டன் பிரதேசத்தில் வசிக்கும் கடையின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட பணத்தில் சந்தேகத்திற்குரிய இரு பாடசாலை மாணவர்கள் கொள்வனவு செய்த பொருட்கள் அனைத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேகத்திற்குரிய இரு பாடசாலை மாணவர்களையும் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தியுள்ளனர்.



