இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பிரித்தானியாவின் முன்னணி கட்சி ஆதரவு

#SriLanka
Mayoorikka
1 year ago
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பிரித்தானியாவின் முன்னணி கட்சி ஆதரவு

பிரித்தானியாவின் முன்னணி அரசியல் கட்சிகளில் ஒன்றான தாரளவாத ஜனநாயக கட்சியின் (Liberal Democrats - லிபரல் டெமாக்ரட்ஸ்) தலைவரான சர் எட் டேவி (Sir Ed Davey) இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்படுவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 தாரளவாத ஜனநாயக கட்சி பிரித்தானியாவில் மூன்றாவது பெரிய கட்சியாகும். நாடாளுமன்றத்தில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியும் ஆகும். மேலும் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் லிப் டெம் கட்சி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில் அந்த கட்சியின் தலைவரான சர் எட் டேவி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம் “இறுதியாக இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் இருக்க முடியும்” என முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 அதுமாத்திரமன்றி தற்போது இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார் “இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எப்போதும் போலவே மோசமாகவே உள்ளது. அது தொடர்ந்து தமிழ் மக்களை ஒடுக்குகிறது. மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சரியான விடயங்களை செய்ய தொடர்ந்து தவறுகிறார்”. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்த வேண்டிய தேவை ஏன் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். “போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 

நாம் நீண்ட காலம் காத்திருந்துவிட்டோம். எனவே தான் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவர் என்ற முறையில் இலங்கையை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிக்கிறோம். அது தொடர்பில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் இறுதியாக இருக்கக்கூடும்”.

 தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தாங்கள் மரியாதை செலுத்துவதாகவும் தனது உரையில் அவர் தெரிவித்துள்ளார். ”படுகொலை செய்யப்பட்டவர்கள், உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். நீதி, சமாதானம் மற்றும் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். நீதியை வழங்குமாறு ஐ நா மனித உரிமைகள் பேரவை மட்டுமின்றி உலகின் பல நாடுகள், அமைப்புகள் ஆகியவை கூறிய எதையும் ரணில் விக்ரமசிங்க செய்யவில்லை. அப்படி அவர் செய்யத் தவறுவதால், அதை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

அதனால் இலங்கை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல்களுக்கு ஆதரவளிக்கிறோம்”. இலங்கையில் போர்க் குற்றங்களும் இனப்படுகொலைகளும் இடம்பெற்றன என்பதை தனது செய்தியில் சர் எட் டேவி சுட்டிக்காட்டினார். மேலும் இலங்கை இராணுவம் மிகவும் மோசமான வகையில் நடந்துகொண்டது என்பதையும் அவர் ஆழமாக எடுத்துரைத்துள்ளார்.

 ”சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறவும் தமது அழுத்தங்களை தொடர வேண்டும்”. அந்த நியாயமும் பொறுப்புக்கூறலும் இடம்பெறுவதற்கு தமிழ் மக்கள் தமது போராட்டங்களை தொடர வேண்டும் எனவும்,அதற்கு தமது கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதையும் அவர் தனது செய்தியில் கூறியுள்ளார். இதேவேளை தாரளவாத ஜனநாயக கட்சியின் தலைவர் கூறியுள்ள இந்த கருத்துக்கள் மற்றொரு பெரிய கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் (Labour Party) தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) எட் டேவி வெளியிட்ட கருத்துக்களுக்கு இணையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 கடந்த 2022 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்ததோடு, அந்த கருத்துக்களை அவர் மீள நினைவூட்டியுள்ளார். “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையொட்டி அட்டூழியங்களைச் செய்தவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட பிரித்தானிய அரசு தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.”

 எதிர்வரும் ஜுலை மாதம் 4ஆம் திகதி பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு நடைபெற்றால் நாட்டின் அடுத்த பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்கும் வாய்ப்புள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!