ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்த வடக்கு கல்வி அமைச்சு!

யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட நியமனம் ஒரு சிலருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 25 ஆம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி 375 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கி வைத்தார். குறித்த நியமனங்களில் ஒரு சில பேருக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த ஆசிரியர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதுடன், நாளைய தினம் உயர்நீதிமன்றத்திலும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் ஒரு சிலருக்கு நியமனம் ரத்து செய்யபப்ட்டமை வருத்தமளிப்பதாகவும் இதுகுறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
நியமனம் வழங்குவதற்கு முன்னர் பட்டதாரிகளின் தகுதிகளை சரியாக ஆராயாமல் அதிகாரிகள் செயற்பட்டுள்ளார்கள் எனவும் குற்றம்சட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் கையினால் நியமனங்களை பெற்றுவிட்டு மீண்டும் அது ரத்தாகியுள்ளமை தங்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமையும் எனவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாணத்தில் 575 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் தகுதி அடிப்படையில் 375 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



