மாணவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறும் பேராதனை பல்கலைக்கழகம்!

கல்வி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறுவதாக பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க எழுத்து மூலம் உபவேந்தருக்கு அறிவித்துள்ளார்.
அதில் மேலும் கூறியிருப்பதாவது: பல்கலைகழகத்தின் மிக முக்கிய கல்வி நிகழ்வான பட்டமளிப்பு விழா ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
இந்த முடிவு எங்கள் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளின் உரிமைகளை கடுமையாக மீறுகிறது என்று நான் நம்புகிறேன்.
கல்வி சாரா சங்கங்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தொலைநோக்கு பார்வையற்றவர்களே இந்த நிலைக்கு முழு பொறுப்பு. இந்நிலைமையை கல்விசாரா ஊழியர்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டிக்க வேண்டும். கல்வி சாரா சங்க தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பீடாதிபதிகளாகிய நாமும் இந்த மனித உரிமை மீறலின் அங்கமாகி விடுவோம்.
பட்டமளிப்பு விழா போன்ற மிக முக்கியமான விழாவை ரத்து செய்ய வற்புறுத்திய பல்கலைக்கழக நிர்வாகமும் ஊழியர்களின் தொழிற்சங்கமும் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பனந்தருவை' இசை நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தன. ஆனால் அவை எந்த அடிப்படையில் என்பதைப் புரிந்து கொள்வது கடினம்.
எனவே, பட்டமளிப்பு விழாவை சீர்குலைக்கும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, இது தொடர்பாக பல்கலைக்கழக நிருவாக மன்றக்குழுவுக்கு உரிய முறையில் தகவலை தெரிவித்து, மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



