தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறைகள்

இலங்கையில் அண்மைக்காலமாக தென்னைகளில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் தென்னைகள் பாதிப்படைந்து வரும் நிலை காணப்படுகின்றது.
தென்னை ஓலையில் வெள்ளை ஈக்கள், 50 – 65 முட்டைகள் வரை சுருள் வடிவில் இடுகின்றன. இந்த முட்டைகள், 4 – 7 நாட்களில் குஞ்சு பொறித்து, ஓலையில் சாறு உறிஞ்சத் துவங்குகின்றன. வளர்ச்சியடைந்த நிலையில், பறக்கத் துவங்கி, அருகில் உள்ள மரங்கள், தோப்புகளுக்கு பரவுகின்றன.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7.00 முதல் 11.00 மணி வரை எரிய விட்டு, கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை, நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டலாம் அல்லது, மரத்தின் தண்டுப் பகுதியில், சுற்றி விடலாம்.
பாதிப்புள்ள மரங்களின் ஓலைகள் மீது தண்ணீரை விசைத் தெளிப்பான் வாயிலாக அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து, வெள்ளை ஈக்கள் மற்றும் முட்டைகளை அழிக்கலாம். உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, கிரைசோபெர்லா ஒட்டுண்ணிகள் ஏக்கருக்கு, 500 எண்ணிக்கையில் ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டினால், வெள்ளை ஈக்களின் புழுக்களை உட்கொண்டு அழிக்கும். காக்ஸினெல்லிட் பொறிவண்டு மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஓலையில் வைத்தால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும்.
தெளிப்பு முறையை கையாள விரும்பினால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 30 மி.லி., வேப்பெண்ணெய் அல்லது, 2 மி.லி., அசாடிராக்டின் கலந்து அத்துடன், 1 மி.லி., ஒட்டு திரவம் கலந்து ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கலாம்.
மேலும், வெள்ளை ஈ பாதிப்புள்ள தோப்புகளில், பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தால், இயற்கை எதிரிகள் பெருகி, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும்



