சர்வதேச நாடுகள் சேர்ந்து தீர்வை தர முன் வரவேண்டும்!

எமக்கான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச நாடுகள் சேர்ந்து தீர்வை தர முன் வரவேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
இன்று 22.05.2024 ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இம்முறை ஜெனீவா சென்ற நேரம் எமக்கான தீர்வை தருவார்கள் என நம்பியிருக்கிறோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தாலும் நாங்கள் சர்வதேச ரீதியிலான விசாரணையையே எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் சந்தித்தது தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பார்வையிட்டதும் அவருக்கு புரிந்திருக்கிறது. இங்கு இனப்படுகொலை தான் நடந்தது என்று புரிந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்த தமிழ் இனமும் அடக்குமுறைக்குள் தான் வாழ்ந்து வருகிறது. எமக்கான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச நாடுகள் சேர்ந்து தீர்வை தர முன் வரவேண்டும். இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களை சந்தித்திருக்கின்றோம்.
ஆனாலும் தீர்வு இல்லை. இவ்வாறான இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு தயார் இல்லை.
இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



