2025 இல் வாரணிய வர்த்தக உடன்படிக்கைக்குள் நுழையும் இலங்கை : ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

இந்தோனேசியாவின் தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் 10வது உலக நீர் மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நேற்று (20.05) பிற்பகல் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்த தலைவர்கள் உறுதியளித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
தலைவர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களிலும் கவனம் செலுத்தியதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில் பங்குபற்றும் வரை இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதில் இவ்வாறான மாநாடுகளின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தோனேசிய ஜனாதிபதி விடோடோவின் தலைமைத்துவத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்த 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாரணிய வர்த்தக உடன்படிக்கைக்குள் நுழைய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தோனேசிய மருந்து நிறுவனங்கள் இலங்கையின் மருந்து தடுப்பு மருந்து சந்தைக்குள் நுழைவதற்கான ஆர்வத்தையும் இந்தோனேசிய ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், இந்தோனேசிய பாமாயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போது இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் செய்துள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தோனேசியாவுடன் வாரணிய வர்த்தக உடன்படிக்கைக்குள் நுழைவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். .
இந்த இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்து சமுத்திரத்தின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



