முள்ளிவாய்க்கால் பேரவலம்! 15 ஆண்டுகள் கடந்து செல்கின்றன
முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று மே 18 உடன் 15 ஆண்டுகள் கடந்து செல்கின்றது. அந்தவகையில் வடக்கு கிழக்கிலும் ஏனைய சில பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு அஞ்சலி நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த வாரம் முதல் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரகாலமாக இதனை குறிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, வருகின்றது. இந்த நிகழ்வுகளை முறியடிப்பதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், பெரும்பாலும் இதுவரையில் சுமூகமான சூழ்நிலை நிலவுகின்றது.
இம்முறை விசேட அம்சமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டின் கலந்துகொள்கின்றார்.
இந்நிலையில் நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது. அந்தவகையில், தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.
அத்தோடு, முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.