சம்பூர் சம்பவத்தினால் சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இலங்கை!

#SriLanka #Trincomalee #Police
Mayoorikka
1 year ago
சம்பூர் சம்பவத்தினால் சர்வதேச அளவில் கடுமையான  விமர்சனத்திற்கு உள்ளான இலங்கை!

போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு 15 வருடங்களாக நீதி கிடைக்காத நிலையில் அவர்களை நினைவுகூர்ந்து உள்ளூர் மக்களுக்கு கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்கள் வன்முறையின் ஊடாக கைது செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த, மூதூர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை நான்கு நாட்களுக்குள் மீளப் பெறுவதில் சட்டத்தரணிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

 சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், கஞ்சித் தடையை நீக்கக் கோரி நீதிமன்றில் வாதிடுவதில் தன்னுடன் இணைந்த முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். “விசேடமாக, சில சட்ட நுணுக்கங்கள் பற்றி அவர்கள் என்னுடன் கலந்தாலோசித்து என்னை வழிநடத்தியிருந்தார்கள் என்பதையும் நான் சொல்ல வேண்டும். இவ்வாறான ஒரு ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. 

எனவே, அந்த முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எதிர்காலத்தில் தமிழ்-முஸ்லிம் இன ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்கும் வழக்காக அமையுமென நம்புகின்றோம்.” என்றார். நீதிமன்ற வெற்றியின் பின்னர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், மே 16 ஆம் திகதி உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், தெற்கில் சட்டவிரோதமாக இல்லாத செயற்பாடு வடக்கு, கிழக்கில் எவ்வாறு சட்டத்திற்குப் புறம்பானதாக அமையுமென நீதிமன்றில் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டார்.

 “மூதூர் நீதிமன்றத்திலே கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நாங்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தோம். தென்னிலங்கையிலே பால் சோறு கொடுப்பது சட்டத்திற்கு புறம்பாகாது என்றால், வடக்கு, கிழக்கில் கஞ்சி கொடுப்பது செய்வது எப்படி சட்ட விரோதமாகும்? இது இப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் வீடுகளில் கஞ்சி காய்ச்சி உண்பவர்கள் கூட பொலிஸாரால் கைது செய்யப்படும் அபாயம் இருக்கிறது சுட்டிக்காட்டினோம். 

எங்களுடைய வாதங்களை ஏற்ற நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்கியது." பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து கஞ்சி விநியோகிக்கக் கூடாது என, தமிழர்களுக்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பொலிஸாரால், மே 12 ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, செல்வ வினோத் சுஜானி மற்றும் நவரத்னராசா ஹரிஹரகுமார் ஆகிய நால்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களை பொலிஸ் சீருடையில் இருந்த ஆண்கள் தரையில் கொடூரமாக இழுத்துச் செல்வதை உள்ளூர்வாசிகள் காணொளி பதிவு செய்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

 “இந்த வழக்கில் சந்தேகநபர்கள் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்பான ஆவணங்களை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அவர்களை விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. 

" கைது செய்யப்பட்டவர்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) சரத்து 3இன் கீழ் குற்றங்களைச் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்பூர் பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.டபிள்யூ.ஜே.துஷார மூதூர் நீதவானிடம் மே 13ஆம் திகதி அறிவித்திருந்தார். அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் தடை சிங்களத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எனக் குறிப்பிடப்படும் எல்டிடிஈ இறுதிப் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பூர் பொலிஸ் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல்களை தடுப்பதற்காக, வழக்கு இலக்கம் AR 211/24 இன் கீழ் நீதிமன்றத்தில் அறிக்கையளிக்கப்பட்ட பின்னர் பெறப்பட்ட தடை உத்தரவு” எவ்வாறாயினும், மே 12ஆம் திகதி மூதூர் நீதவானால், யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கும், கஞ்சி விநியோகம் செய்வதற்கும் எதிராக பிறப்பிக்கப்பட்ட AR 211/ 24 தடை உத்தரவில் விடுதலைப் புலிகள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

 "சம்பூர் பொலிஸ் பிரிவில் சட்ட ரீதியாக பிரயோசனமடைய கூடிய பொது இடங்களான பாடசாலை கோயில் போன்ற பொது இடங்களில் வெள்ளை முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை ஞாபகார்த்தமூட்டும் எண்ணத்துடன் அதற்காக செயல்படுத்தல் சட்டவிரோதமான மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடிய வகையில் மக்களை ஒன்று கூட்டுதல், வாகன ஊர்வலம் மற்றும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வகையில் பொது இடத்தில் ஒன்று கூட்டல் என்பன மக்களின் சுகாதாரத்துக்கு இடையூறான வகையில் ஏதாவது தொற்று நோய் ஏற்படக்கூடிய வகையில் உணவு உபகரணங்கள் அல்லது கஞ்சி, ஏதாவது குடிபானம் வழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டுதல் அல்லது சுகாதாரம் மற்றும் மக்கள் உயிர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த விதமான செயற்பாடுகளையும் செய்யாமல் இருப்பதற்கு” என தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 இதற்கமைய மாவீரர் சங்கத் தலைவர், கந்தையா காண்டீபன், மாவீரர் சாங்க உப தலைவர், சாந்தலிங்கம் கோபிராசா, மாவீரர் சங்க பொருளாளர் நவரத்னராசா ஹரிஹரகுமார், மாவீரர் சங்க செயலாளர் செல்வ வினோத் சுஜானி, மாவீரர் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு நபர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. போரின் இறுதிநாட்களில், அரசின் தடையால் பட்டினியாலும், மருந்தின்றியும் வாடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், கிடைத்த அரிசியைக் கொண்டு காய்ச்சிய முள்ளிவாய்க்கால் கஞ்சியால் எவ்வாறு பட்டினிச் சாவை எதிர்கொண்டார்கள் என்பதை நினைவுகூரும் வகையிலும், பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கனரக ஆயுதம், பட்டினி மற்றும் நோயினால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், மே 12, ஞாயிற்றுக்கிழமை காலை, திருகோணமலை, சம்பூர், சேனையூர் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக உள்ளூர் மக்கள் கஞ்சி காய்ச்ச ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தடை உத்தரவை, அவ்விடத்திற்கு வந்த சம்பூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடுக்க முற்பட்ட போது, போரில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்காகவே இந்த நிகழ்வை நடத்துவதாகக் கூறி அதனை ஏற்க அந்த மக்கள் மறுத்தனர்.

 நீதிமன்ற உத்தரவில் மாவீரர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் கஞ்சி காய்ச்சுபவர்களிடம் குறிப்பிடும் காணொளி ஒன்றும் வெளியாகியிருந்தது. சில மணித்தியாலங்களின் பின்னர், இரவோடு இரவாக அவர்களது வீடுகளுக்குச் சென்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரும், மே 13ஆம் திகதி மூதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, “சுகாதார அதிகாரியின் அனுமதியின்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க கஞ்சி தயாரித்து, உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இந்தக் கஞ்சிகளை விநியோகித்தவர்கள்” என அந்தக் குழுவை நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். இறந்தவர்களைக் நினைவுகூர முற்பட்ட பெண்களை கைது செய்ய பொலிஸார் நடத்திய வன்முறையைக் காட்டும் காணொளிகள் வெளியானதையடுத்து, நாடாளுமன்றத்திலும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அதன் பின்னர், மே 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் “சந்தேகநபர் மற்றும் மூன்று பெண் சந்தேகநபர்களும் ஒரு வகை கஞ்சியை விநியோகித்ததால் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் பெண் சந்தேகநபர்கள் மூவரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் விசேடமாக தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதற்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாயை கைது செய்யாமல் இருக்க மகள் தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டிய மூதூர் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்ய சென்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாயைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னை காயப்படுத்தச் சென்ற மகளிடம் கத்தியை பறிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரும் தாயும் படுகாயமடைந்தமையே இங்கு நடந்துள்ளதாக அயலவர்கள் சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் கொழும்பு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை ‘கூரிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்’ என வர்ணித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க கோரும் போது, சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, “புலிகள் அமைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த செயற்பாடுகள்” 2007 ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) சரத்து 03 இன் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 ICCPR சட்டத்தின் பிரிவு 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் உயர் நீதிமன்றத்தை விட கீழான நீதிமன்றத்தில் பிணைப் பெறுவது கடினம். விசாரணைக்கு பின்னர் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ICCPR சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. கஞ்சி விநியோகத்தை இலக்காகக் கொண்ட பொலிஸாரின் உண்மையான நோக்கத்தை மறைப்பதே இதன் நோக்கம் என முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 “நினைவேந்தல்களைத் தடுப்பதற்கான அவர்களின் நோக்கத்தை மறைப்பதற்காக, பொலிஸார் அந்த நிகழ்வுகளை புலிகளை நினைவுகூர்வதாகவும் புலிகளை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் எனவும் முத்திரை குத்தி, ICCPR சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். ஆம், எதிர்ப்பு, பிடிவாதம் மற்றும் நெகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் கஞ்சியை சமைத்து தானம் செய்வதே அவர்களின் குறிக்கோள்.” 

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிதியத்தின் உறுப்பினரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். தேசிய, இன அல்லது மத வெறுப்பிலிருந்து தனிநபர்களைப் பாதுகாப்பதற்கான சட்டமாகக் கருதப்படும் ICCPR சட்டத்தை, எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்காக, இலங்கையானது தவறாகப் பயன்படுத்தப்பட்டமைக்காக சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!