நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படும்: கல்வி அமைச்சர்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும்.
அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்து அதற்குரிய சுற்றுநிருபம் எதிர்வரும் நாள்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி நிர்வாக மறுசீரமைப்புச் செயற்பாடுகள் ஆரம்ப கட்டத்தை எட்டியுள்ளோம். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் சுற்றுநிருபம் எதிர்வரும் நாள்களில் வெளியிடப்படும்.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படவுள்ளதுடன், அவற்றை மேற்பார்வையிடுவதற்காக 350 பாடசாலை சபைகள் உருவாக்கப்படும்.
தற்போதுள்ள 100 கல்வி வலயங்களும் படிப்படியாக அதிகரிக்கப்படும். பாடசாலைள் குழுக்களின் அடிப்படையில், 01 - 11 ஆம் ஆண்டு வரையிலான வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு மாணவர்களை உயர்தரத்திற்கு உள்வாங்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது என்றார்.



