நாம் எப்போதும் கடனில் வாழ முடியாது : ரணில் விக்கிரமசிங்க!

பழைய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வியாபாரத்தை நாட்டில் உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் தடைகள் நீக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, தோட்டத் துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
அதுருகிரி தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 1978ஆம் ஆண்டு முதல் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்று தேவைப்பட்டது. அன்று எம்.டி.எச். திரு.ஜெயவர்தனவின் இருப்பிடமாக விளங்கும் இந்தப் பகுதியில், இவ்வாறான ஒரு பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்குத் தேவையான நிலம் வழங்கப்பட்டது. அப்போது இந்தப் பகுதி அவ்வளவு நகரமயமாக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக திரு.நவீன் திஸாநாயக்க இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தார். அப்போது நியமிக்கப்பட்ட பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்கள் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டில் விவசாய உற்பத்தி இல்லை. மேலும், ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், நமது ஆடைத் தொழிலுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இல்லை.
எனவே முதலில் இந்த நாட்டில் நெற்பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்ய உழைத்தோம். 2022, 2023 இல் யால கண்ணா மற்றும் 2023 இல் மகா கண்ணாவின் வெற்றியின் காரணமாக, இந்த திட்டத்தைத் தொடர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, நாட்டின் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயத்தின் மூலம் ஸ்திரப்படுத்தப்பட்டது என்றே கூற வேண்டும்.
இப்போது இந்த நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் மற்ற தனியார் கடனாளிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும். கடனை அடைக்க எங்களுக்கு அவகாசம் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, அதிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை. மேலும் நாம் எப்போதும் கடனில் வாழ முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்”எனத் தெரிவித்துள்ளார்.



