பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தோம்: மஹிந்த

பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் நீங்கி, அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற பலஸ்தீனத்தில் இன்றைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பலஸ்தீன - இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஆரம்ப தலைவர் என்ற ரீதியில் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் குரல் கொடுத்தோம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அன்று முதல் இன்று வரையில் பலஸ்தீனத்திற்காகவும் அந்த மக்களுக்காகவும் முன்னிற்கின்றோம். அங்குள்ள நெருக்கடிகளை தீர்க்க வேண்டுமென்று அந்த விடயத்தில் தலையிடும் அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
7 தசாப்தங்களாக தொடரும் பலஸ்தீன - இஸ்ரேல் நெருக்கடி தொடர்பில் உலக அரசியல் தொடர்பில் அறிந்த அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியும். ஐ.நா கூட்டத்தில் உரையாற்றும் சந்தர்ப்பங்களில் பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மக்களுக்கு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
எவ்வாறாயினும் யுத்தம் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையாது என்பதனை கடுமையாக கூறிக்கொள்கின்றோம். இப்போது காஸா எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் அவலமானது.
30 வருட யுத்தத்தில் இருந்த எங்களுக்கு இதனை புரிந்துகொள்ள முடியும். பலஸ்தீனத்தில் பெருமளவானவர்கள் உயிரிழக்கின்றனர் என்றார்.



