விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து இறுதி தீர்மானத்தை நாளை (15.05) அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.சந்துன் விதானகே இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, முறைப்பாட்டில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார்.
கடந்த 12ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் விஜயதாச ராஜபக்ஷ அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கடுவெல மாவட்ட நீதிமன்றம், விஜயதாச ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட தடை விதித்தது.
அந்தத் தடை உத்தரவுக்கு எதிராகவே இன்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சட்டதரணி நீதிமன்ற அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
இந்நிலையில் இருதரப்பு வாதபிரதிவாதங்களை தொடர்ந்து இறுதி தீர்ப்பை அறிவிக்கும் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



