வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கம்பனிகள் செயற்பட வேண்டும்: ஜீவன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் நாள் சம்பள முறைமை பொருத்தமற்றதாகும்.
அந்த முறைமையில் இருந்து மாற வேண்டியது அவசியம். அதற்காக நான்கைந்து வருடங்கள் அவசியப்படும். அதற்காக தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளத்துடன் காத்திருக்கச் வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொகையை பெற்றுத்தருவதாக கூறும்.
எதிர்கட்சிகள் தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதாக கூறினாலும் அதற்காக பொறிமுறை என்னவென்பது கேள்விக்குரியாகும்.
ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாதென கூறிய கம்பனிகள், அரசாங்கம் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை விடுத்த பின்பு அடிப்படைச் சம்ளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க முன்வந்துள்ளனர். அதனால் சம்பள அதிகரிப்பை செய்ய முடியும் என்று கம்பெனிகள் காண்பித்துள்ளன என்றார்.



