தற்போதைய நவீன தொழில்நுட்பம் அணுகுண்டை விட ஆபத்தானது - ரணில் விக்கிரமசிங்க!

தற்போதைய தொழிநுட்ப யுகம் முன்னெப்போதும் இல்லாத யுகம் எனவும் கட்டுப்படுத்தாவிடின் அணுகுண்டை விட ஆபத்தானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்டதாரி நிறுவகத்தின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (31.01) கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அறிவுள்ள நாகரீக சமூகத்தின் ஊடாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமான இலங்கைக்கு அந்தக் கோட்பாட்டை இன்னும் ஆழமாக ஆராய்ந்து உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாம் தானியங்கிகளைப் பார்க்கிறோம். அவை செயற்கை நுண்ணறிவுடன் செயல்படுகின்றன. இந்த வளர்ச்சியின் முடிவு என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இன்று மேற்கத்திய நாடுகளில் இதைப் பற்றிய விவாதங்கள் அதிகம். அப்படியானால், இந்த தொழில்நுட்பம் நமது மத வளர்ச்சிக்கும், பௌத்த பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவே, கல்வி அமைச்சருடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கேற்ப, தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இந்த நாட்டில் கல்வி முறையை வலுப்படுத்துவோம் என நம்புகிறோம்.
அறிவு மற்றும் நாகரிக சமூகத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். நாம் வாழும் தொழில்நுட்ப யுகம் முன்னெப்போதும் இல்லாதது. அணுகுண்டு உருவாக்கப்பட்ட பிறகு, தொழில்நுட்பம் முடிந்துவிட்டது என்று நினைத்தோம். இந்த நவீன தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அணுகுண்டை விட ஆபத்தானது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



