தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த சுமந்திரன்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் சுமந்திரனை பொதுச்செயலாளராக அக்கட்சியின் தலைவரான சிறீதரன் முன்மொழிந்திருந்த நிலையில், அதற்கு சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தான் கிழக்கிற்கு பொதுச்செயலாளர் பதவி தருவதாக கூறி இருந்தேன். அதை மீற மாட்டேன் கிழக்கிற்கே பொதுச்செயலாளர் பதவியை வழங்குங்கள் என்று கூறி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய குழுவில் குகதாசனை பொது செயலாளராக பொதுச்சபைக்கு பிரேரிக்க இணக்கம் ஏற்பட்டது. அத்தோடு மத்திய குழுவில் இருந்து பொதுச்செயலாளராக குகதாசன் அவர்களை தவிர வேறு யாரும் போட்டி இடுவதில்லை என்ற இணக்கமும் ஏற்பட்டது.
அதன் பிறகு பொதுச்சபையில் குகதாசன் அவர்களின் பிரேரிப்பிற்கு ஒரு தரப்பால் எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்ட நிலையில் மத்திய குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று வாக்களிப்பிற்கு விடப்பட்டது.
வாக்களிப்பின் மூலம் மத்திய குழுவின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு இந்த முறை சுமந்திரன் எந்தவிதமான பதவிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சாதாரண மத்திய குழு உறுப்பினராக மாத்திரம் தான் நீடிக்கிறார்.