உலகம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்மம் : போர் என்னும் அரக்கனின் கோர தாண்டவம்!

#SriLanka #Article #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media #lanka4_news
Dhushanthini K
3 months ago
உலகம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்மம் : போர் என்னும் அரக்கனின் கோர தாண்டவம்!

வடகொரிய ஜனாதிபதி கிம்-ஜெங் உன் இந்த வருடத்தில் இடம்பெறக்கூடிய அமெரிக்க தேர்தல் மற்றும் தென் கொரிய தேர்தல்களுக்கு முன்னதாக ஆயுத உற்பத்தி, அணுவாயுத பரிசோதனை மூலம் பகைமையை எழுப்புவார் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

சமீப காலமாகவே போர் குறித்த அச்சுறுத்தல்கள் உலக நாடுகளின் அமைதியை சீர்குலைத்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பித்து இரண்டு வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பமாகி இரு மாதங்களிலேயே இருதரப்பில் இருந்தும் ஏறக்குறைய 30,000 பேர் உயிரிழக்க காரணமாகியுள்ளது. 

இந்தபோர்கள் எப்பொழுது முடியும் என்பதுதான் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனை தனது பிடிக்குள் கொண்டுவரும் வரை ரஷ்யா ஓயாது எனவும், ஹமாஸை அழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது எனவும் இருப்பிரிவினரும் சூளுரைத்திருக்கின்றன. இவ்விரு நாடுகளின் எண்ணங்களுக்கும், செயற்பாட்டிற்கும் தீணி போட்டு வளர்ப்பது மூன்றாம் நாடுகள் தான். 

எங்கெல்லம் யுத்தம், அல்லது மோதல் வெடிக்கிறதோ, அங்கெல்லாம் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கை பலரின் மத்தியில் கடும் வாத பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவின் தலையீடும், இடையில் விட்டுச்செல்லும் மனப்பான்மையும் பல நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தான் பிரச்சினையை எடுத்துக்கூறலாம். 

அவ்வாறாக தற்போது உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக  நிதி, ஆயுத உதவிகளை வழங்கியது. சர்வதேச அரங்கில் ரஷ்யாவை தனிமைப்படுத்த பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதுமட்டுமில்லாமல் ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலுக்கு உதவி செய்து வருகிறது. 

எப்படி அமெரிக்கா, உக்ரைனுக்கு உதவியாக இருந்தததோ, அதேபோல்தான் ரஷ்யாவிற்கு வடகொரியா உதவியாக அமைந்தது. அண்மையில் ரஷ்யாவிற்கு, வடகொரியா ஆயுத பரிமாற்றம் செய்ததாக தகவல் கசிந்திருந்தது. இந்த குற்றச்சாட்டை அமெரிக்க உளவு பிரிவு நீண்டகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் வடகொரியா தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறது. 

இவ்வாறாக உலகம் முழுவதும் ஒரு அமைதியற்ற சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கையில், அண்மையில் இடம்பெற்ற இரு கொரியாக்களுக்கும் இடையிலான மோதல் ஆசிய கண்டத்திலும் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் சமீபகாலமாக கிம் மேற்கொள்ளும் அணுவாயுத பரிசோதனை, ஆயுத தயாரிப்பு மேற்குலக நாடுகள் மத்தியிலும் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

வட கொரியாவிற்கு எதிராக தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும், அதன் இறையாண்மையை அச்சுறுத்தவும் தென் கொரியா துணிந்தால் பதில் தாக்குதல்கள் நடத்த தயங்கமாட்டோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது மீண்டும் ஒரு பாரிய மோதல் ஏற்படலாம் என்ற சிந்தனையை தோற்றுவித்துள்ளது. அல்லது பாபா வங்காவின் கணிப்புப்படி இந்த வருடத்தில் ஒரு அணுவாயுத தாக்குதல் இடம்பெறுமோ என்ற எண்ணப்பாட்டை தோற்றுவித்துள்ளது. 

இதற்கிடையில் ஏப்ரல் தேர்தலில் வட கொரியாவுடன் சமரசம் செய்ய தென் கொரிய தாராளவாதிகள் விரும்புவதாகவும், அவர்கள் இதில் வெற்றிப்பெறுவார்கள் என கிம் நம்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றால்  அமெரிக்க சலுகைகளை வெல்ல முடியும் என்றும் கிம் கருதுவதாக அவர்கள் நம்புகின்றனர். 

முன்னதாக நீண்ட பதற்றங்களுக்கு மத்தியில் டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கத்தின் கீழ், இரு நாட்டு தலைவர்களும் ஒரு வரலாற்று சந்திப்பை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பு அப்போது சர்வதேச வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது நினைவிருக்கலாம். 

எவ்வாறாயினும், வட கொரிய ஆத்திரமூட்டல்கள் இரு கொரியாக்களுக்கு இடையே தற்செயலான, மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத மோதல்களைத் தூண்டலாம் என்று சில பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, தென் கொரியாவுடனான சர்ச்சைக்குரிய மேற்கு கடல் எல்லைக்கு அருகே வட கொரியா பீரங்கி குண்டுகளை வீசியது, தென் கொரியா பதிலுக்கு அதே பகுதியில் தனது சொந்த துப்பாக்கிச் சூடு பயிற்சியை நடத்த தூண்டியது. இவ்வாறாக கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் தணிந்தபாடில்லை. 

1999 முதல் கொரியாக்களுக்கு இடையே மூன்று இரத்தக்களரி கடற்படை மோதல்கள் சர்ச்சைக்குரிய கடல் எல்லையில் நிகழ்ந்தன. அப்பகுதியில் இராணுவ துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் கொரியாவின் பலவீனமான 2018 ஒப்பந்தத்தை மீறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இவ்வாறாக உலகம் முழுவதும், கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த மோதல்கள் மக்களின் இருப்புக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளதுடன், மூன்றாம் உலக மகா யுத்தத்தம் ஏற்பட காரணமாக அமைந்துவிடுமோ என்ற ஆழ்ந்த கவலையையும் நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.