இலங்கையில் திணிக்கப்படும் இந்தியாவின் கலை கலாச்சாரங்கள்!

#India #SriLanka #Trincomalee #Festival #Governor #Lifestyle #Lanka4 #SenthilThondaman #dance
Mayoorikka
3 months ago
இலங்கையில் திணிக்கப்படும்  இந்தியாவின் கலை கலாச்சாரங்கள்!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவியேற்றத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் சாயல் அதவது இந்தியாவின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தென்படுகின்றது.

 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்திய வம்சாவளி மலையக தமிழர் என்பதனாலோ என்னவோ கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஆளுநர் பதவியேற்பிற்கு பின்னர் இந்தியாவின் ஊடுருவல் அதிகமாக காணப்படுகின்றது.

 அரசியலை தாண்டி கலை கலாச்சாரம் போன்றவற்றில் இந்தியாவின் பாணி காணப்படுகின்றது. அந்தவகையில் தான் தற்பொழுது கிழக்கு மாகாண ஆளுநரை கையாள்கின்றது இந்தியா. 

தனது பூகோள அரசியல் இலாபங்களுக்காக இந்தியா இலங்கையில் தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்காக தொடர்ந்து பிரயத்தனம் செய்கின்றது. காரணம் இந்தியாவுக்கு எதிரான தளத்தை இலங்கையின் கிழக்கு பகுதியில் நிரந்தரமாக உருவாக்கி இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கும், தமிழகம் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்வதற்கு வாய்ப்பாக இலங்கையின் கிழக்கு கடல் பரப்பை பயன்படுத்த சீனா திட்டமிடுகின்றது என்ற பயமே அடிப்படை.

 இந்தநிலையில் வடக்கில் ஏற்கனவே கலை மற்றும் சினிமா ஊடாக இந்தியாவின் ஊடுருவல் அதிகளவில் உள்ளது. தற்பொழுது அதேபாணியில் கிழக்கில் ஆளுநரூடாக கிழக்கிற்குள் கால் ஊன்ற முயல்கின்றது. அதற்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இசைந்து கொடுக்கின்றார். ஏனெனில் அவரது தொப்புள் கொடி உறவு இந்தியா. அது இந்தியாவிற்கு மேலும் சாதகமாக அமைகின்றது.

 தனது பூகோள அரசியல் ஆபத்திற்காக இலங்கையின் கரையோர திருகோணமலை துறைமுகத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டநாள் கனவு. வடகிழக்கு மாகாணங்கள் சீனா இந்தியா மோதும் களமாக அமைந்துள்ளது. அந்த செயற்பாட்டை தந்திரோபாயமாக காய்நகர்த்தி வருகின்றது இலங்கை அரசாங்கம். அதற்கு முக்கிய காரணம் 13 ஆவது திருத்த சட்டம்.

 இவை இவ்வாறு இருக்க தற்பொழுது இந்தியா கிழக்கில் சீனாவின் ஆதிக்கத்தினை குறைப்பதற்கு தான் முந்தியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு ஆளுனரூடாக காய்நகர்த்தி வருகின்றது. அதற்கு தான் தற்பொழுது திருகோணமையில் நிகழும் இந்திய சாயல் கலை கலாச்சார நிகழ்வுகள். 

இந்த நிகழ்வுகளை இலங்கையில் திணிப்பதன் ஊடாக தனது செல்வாக்கு மேலோங்கியிருப்பதாக சீனாவிற்கு இந்தியா மறைமுகமாக உணர்த்துகின்றது.

 அவ்வாறுதான் இலங்கைக்கு தொடர்பே இல்லாத தமிழ்நாட்டில் மரபுவழியாக வந்த ஜல்லிக் கட்டு பாரதம், கோலம் போடுதல் போன்ற நிகழ்வுகள் இந்தியாவிலேயே உருவாகி அங்கேயே காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நிகழ்வுகளை இலங்கையில் கொண்டுவந்து திணிக்கின்றனர்.

 அந்த கலாச்சாரத்தினை தற்பொழுது கிழக்கு மாகாண ஆளுநர் திருகோணமலையில் உருவாக்கி வருகின்றார். இதற்கு முழுமையாக இந்தியாவின் பின்னணி இருப்பதாகவே பலர் கூறுகின்றனர். 

 பொங்கல் விழா செய்ய வேண்டுமானால் எங்களுடைய அழிந்துவரும் கோலாட்டம், கும்மி, பறை போன்ற பாரம்பரிய கலை கலாச்சாரங்களைக் கொண்டு நடத்தியிருக்கலாம் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இவ்வாறு போனால் இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கும் மற்றொரு பகுதி இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் மாறிவிடும் என்பதில் ஐயமே இல்லை.