இக்கலியுகத்திலும், கன்னி தெய்வம் வாலையம்மன் அல்லது திரிபுர சுந்தரி வழிபாடு

#spiritual #worship #Lanka4 #ஆன்மீகம் #கடவுள் #வாலையம்மன் #திரிபுரசுந்தரி #goddess #valaiamman #லங்கா4
Mugunthan Mugunthan
4 months ago
இக்கலியுகத்திலும், கன்னி தெய்வம் வாலையம்மன் அல்லது திரிபுர சுந்தரி வழிபாடு

ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மணம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

 பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது பாரத தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. சக்தி வழிபாடு என்பது தாய்வழி வழிபாடுதான். 

 ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. 

 மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இன்பத்தை கருவாக்கினாள் பெண். உயிருக்குள் உயிர் சுமந்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்தவளும் பெண்தான். 

 இந்த காரணத்தினாலேயே பெண்ணை மகாசக்தியாகப் பார்த்திருக்கிறான் ஆதிமனிதன். தன்னைவிட பலம் குன்றிய பெண்ணைப் பார்த்து பயந்திருக்கிறான். அவளைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறான்.

images/content-image/1703491079.jpg

 அந்தப் பழங்கால மரபுக்கும் வரலாறுக்கும் இன்றும் நிலவும் சான்று தான் தமிழர்களின் கன்னி வழிபாடு. ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

 இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள்.

 இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள். சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி பட்டணம் வரை தொடர்ந்து வருகிறது.

 இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். பெரும்பாலும் செவ்வாய்கிழமை தான் கன்னிக்கு ஏற்ற நாள். எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். 

மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூஜை வைத்து வணங்குவார்கள். தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்கும் வழக்கம் நம் நாட்டில் காணப்படுகிறது.

images/content-image/1703491308.jpg

 பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு. அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை என தனி மூலை இருப்பதே... கன்னி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாக உள்ளது.

 பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன. தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.

 குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும். ஏன் என்றால் குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும்.

 அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும். இறந்த பெண் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். சிறுமிகளுக்கு அதற்கேற்ற ஆடைகளும், இளம் பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், அதை விட பெரிய பெண்ணுக்கு சேலை சட்டையும் வாங்கி வைத்து வணங்குவார்கள்.

 அந்திக் கருக்கலில் கன்னியை வணங்க துவங்குகிறார்கள். இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள். இந்த நார்ப்பெட்டிக்கு கன்னிப்பெட்டி என்று பெயர்.

images/content-image/1703491518.jpg

 கன்னிப்பெட்டியை வைக்கும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர். தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு கும்பிடுபவர்களுககு கிடைக்கும். 

 பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார்பெட்டியை வைத்து விடுவார்கள். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். கன்னி பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். கன்னிப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள். 

 இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர்கள் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது. துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னிக்கும்பிட்ட துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். 

 ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண். தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று கன்னி தெய்வங்களின் எழுதப்படாத சட்டம். குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னி வழிபாடு ஒரு சான்றாகும். இன்றைய நவீனயுகத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் பொருள் தேட திரைகடல் தாண்டி தேடி ஓடி விடுகிறார்கள். எப்போதாவது கல்யாணம், கோயில் கொடை என்றால் கூட அவர்கள் ஒன்று சேருவது கடினம்.

images/content-image/1703491786.jpg

 ஆனால் கன்னி தெய்வம் குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்யவேண்டும். பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே படையலில் நிச்சயம் பனியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம்பெறும்.

 அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு இடத்தில் இலையை போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். இந்த சமபந்தி விருந்து கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்த்துவிடுகிறாள். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உறவை தேடி ஓடி வருகிறார்கள்.

 பெரும்பாலுமே ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தான் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. இதுபோன்ற கன்னிகளுக்கும் அதுபோலதான் ஆசை. தன் வீட்டில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும் என ஆசைபடுவாள். அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பார்.

 இப்போது பல மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் இடத்துக்கே கன்னியை கொண்டு சென்று வைத்து வணங்கி வருகிறார்கள். பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடிர் திடிரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் காணலாம். கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது.

 குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து. கன்னிகளில் கதை பலவாறாக பேசப்பட்டு வருகிறது. அதில் பல கதை மனதை உருககுவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த சிறுமி ஒருவர் இறந்து விட்டாள். வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

 23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவடை சட்டைதானா... போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை சட்டை வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர்.

 அந்த அளவுக்கு கன்னிதெய்வம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மறைந்து வாழும் குழந்தையாகவே வணங்கப்படுகிறது. ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம்.

 இதுபோல் கன்னி தெய்வங்கள் இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது. தற்போது பனை தொழில் முழுவதும் குன்றி விட்டது. நார் பெட்டி போன்ற பொருள்கள் காட்சி பொருளாக மாறிவிட்டது. நவீன யுகத்தில் கன்னி நார் பெட்டி மட்டும் தாயரிக்கும் பணி நடந்து வருகிறது. 

 பல கிராமங்களில் பல வீடுகளில் இந்த நார் பெட்டி பல வண்ணத்தில் தொங்கி கொண்டிருப்பதை நாம் இப்போதும் காணலாம். பழமையை பறைசாற்றும் இந்த வழிபாடு, பல வரலாறுகளை சுமந்து கொண்டு தமிழரின் பண்பாட்டை இன்றும் பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

 ஓம்நமசிவாய நல்லதே நடக்கும்