நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீட்டில் நிறுத்தப்பட்டதா இறக்குவானை அரச பேருந்து சேவை?
இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு அதிகாலை 4.15 மற்றும் காலை 7 மணிக்கு பல தசாப்தங்களாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இயங்கி வந்தன.
ஆனால், அதிகாலை 4.15க்கு சேவையில் ஈடுபடும் பேருந்து கடந்த ஒரு சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், பயணிகள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இறக்குவானையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் கொடக்கவெல டிப்போவிற்கு சொந்தமான பேருந்துகள் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டிலேயே இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் குறைக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு காலை 7 மணிக்கு சேவையில் ஈடுபடும் பேருந்து சேவையும் அவ்வப்போது நிறுத்தப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு இதற்கு முன்னர் காலை 8.45ற்கு இயங்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நிறுத்தப்பட்டதுடன், அந்த பேருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படவில்லை.
அத்துடன், இறக்குவானையிலிருந்து பதுளை மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கு இயங்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் நிறுத்தப்பட்டதுடன், அந்த பேருந்து சேவைகளும் மீள ஆரம்பிக்கப்படவில்லை.
மேலும், இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பிற்பகல் 2.15ற்கு சேவையில் ஈடுபடுகின்றது. எனினும், இந்த பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இறக்குவானையிலிருந்து கொழும்பிற்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை நிறுத்தி, அந்த நேர அட்டவணைக்கு தனியாருக்கு சொந்தமான பேருந்து சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.