இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சர் ஒருவருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தேசிய விளையாட்டு சபையின் பணிப்பாளர் சுதத் சந்திரசேகர ஆகிய இரு தரப்பினரிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் எனவும், தமது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்புப் படையினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 6, 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் மூன்று கடிதங்களை அனுப்பியதன் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப் பெரிய 'கரும் புள்ளி' எனவும், மிகப்பெரிய துரோகம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஊழல்வாதிகளை சிக்க வைக்க நாடாளுமன்றம் கோப் குழுவை பணித்துள்ளது. எனினும், தற்போது கோப் குழு மோசடியாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதை போல தோன்றுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பதவி விலகுமாறு எவரிடமிருந்தும் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கட்சி மாறுதல் அல்லது எதிர்க்கட்சியில் அமருதல் போன்ற எண்ணம் தமக்கு இல்லை எனவும், தேசிய விளையாட்டு சங்கங்களின் ஊழலை தடுப்பதே தமது ஒரே நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.