மருந்து விநியோகம்: நெருக்கடியை உருவாக்கிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஓடர்கள் ரத்து
மருந்து விநியோகம் தொடர்பில் பாரிய பிரச்சினையில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் உடனடியாக இடைநிறுத்தி ரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவடையும் வரை இந்த நிறுவனத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
Isolez Bio Tech Pharma எனப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை இடைநிறுத்தவும் ரத்து செய்யவும் அத்துடன் அதற்கேற்ப பெறப்படும் பொருட்களையும் இடைநிறுத்தவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த மருந்து நிறுவனம் தொடர்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் அனுப்பப்பட்டு விசாரணைகள் கோரப்பட்டு சந்தேகத்திற்குரிய பொருட்களை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் அவ்வாறான பொருட்கள் கிடைக்கப்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இந்த பிரச்சினைக்குரிய மருந்து நிறுவனம் மற்றும் சம்பவம் தொடர்பில் சட்ட ஆலோசனை வழங்குமாறும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.