போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மின்சார கார்கள்: விரிவான விசாரணை ஆரம்பம்
போலி ஆவணங்களை தயாரித்து குறைந்த மதிப்பீட்டில் பல கோடி ரூபாய் பெறுமதியான 07 மின்சார கார்களை இறக்குமதி செய்ததாக கூறப்படும் அமைச்சின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக இலங்கை சுங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இந்தச் சம்பவம் தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சின் பல உயர் அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
போலி ஆவணங்கள் மற்றும் குறைந்த மதிப்பீடுகளை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட 07 மின்சார கார்கள் தற்போது சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் டாலர் சம்பாதிக்கும் நபர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து போலி வங்கி சான்றிதழ்களை சமர்ப்பித்து இந்த மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை குழுக்கள் சந்தேகிக்கின்றன.
இந்த பெரிய கடத்தலில் ஈடுபட்டவர்கள் வரும் நாட்களில் கைது செய்யப்பட உள்ளனர்.
இதேவேளை, இந்த மோசடிக்கு பின்னால் பலமான அரசியல் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.