இலங்கை வரும் பிரித்தானிய உயர் மட்ட அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

பௌத்த - சிங்கள மயமாக்கல் தொடர்பில் கள ஆய்வினை மேற்கொள்வதற்காகவும் தமிழ் பிரதிநிதிகளை சந்திப்பதற்காவும் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள பிரித்தானிய உயர்மட்ட அமைச்சரொருவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட, கிழக்கு மாகாணங்களில் அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல், தீவிரமடைந்துவரும் பௌத்த - சிங்கள மயமாக்கம் போன்ற பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றன.
அந்தவகையில், கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளின் சார்பின் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி, இலங்கையில் அதிகாரப்பகிர்வு மற்றும் காணி விடுவிப்பு என்பன இன்னமும் கரிசனைக்குரிய பிரச்சினைகளாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுமாத்திரமன்றி கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அவர், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுப்பதன் ஊடாக மாத்திரமே அதனை வெற்றிகரமானதொரு பொறிமுறையாக உருவாக்கமுடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் பிரித்தானியாவின் உயர்மட்ட அமைச்சரொருவர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாகவும், அவரும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் உள்ளிட்ட அதிகாரிகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
இவ்வாறு இலங்கைக்கும், குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரித்தானிய அமைச்சர் பல்வேறு முக்கிய தரப்பினரை சந்தித்து, நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



