பொன்னாவெளி பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலை திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலை திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று(26) செவ்வாய்க்கிழமை மாலை 3.00மணிக்கு இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பொன்னாவெளி டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை மற்றும் நீர் வளசபையின் ஆய்வறிக்கை காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன.
தொடர்ந்து, பொன்னாவெளி டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. மேலும் இப்பகுதிகளில் மீன் வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை உற்பத்திகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக குறித்த திட்டத்தில் அவதானத்தினை செலுத்துவதுடன், இப்பகுதி மக்களுக்கான குறித்த திட்டம் தொடர்பான போதிய தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்படுவதனூடாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன்,
வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல், வடமாகாண ஆளுநரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பூநகரி பிரதேச செயலாளர், பூநகரி பிரதேச சபை செயலாளர், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், சீமேந்து தொழிற்சாலை சார்ந்த பிரதிநிதிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்