நாடு தோல்வி அடைந்ததற்கு நிதி வங்குரோத்து நிலையை அறிவித்த மத்திய வங்கியே காரணம்!
மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துக்களைப் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் 2022 செப்டம்பர் 01 மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வினவப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் பிரகாரம் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்குக் காணப்படுவதாகவும் பிழையான முறையொன்றுக்கு அமைய 202.04.12 ஆம் திகதி மத்திய வங்கியினால் இந்நாட்டில் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனால் முழு நாடும் அசௌகரியத்துக்குட்பட்டதாக அவர் தெரிவித்தார். விசேடமாக 2022 இல் முதலாவது காலாண்டில் 3.9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டி இருந்ததாகவும், 2022 ஏப்ரல் 08 இல் 3.2 பில்லியன் டொலர் செலுத்தியிருந்ததுடன் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, ஏப்ரல் 12 வரை சுமார் 70 மில்லியன் டொலர் சீனாவுக்கு செலுத்தவேண்டி இருந்ததாகவும், இந்த நிலையில், ஏப்ரல் 12 இல் எந்தவொரு விபரமும் இல்லாமல் மத்திய வங்கியினால் நிதி வங்குரோத்து நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது பிழையான செயற்பாடு எனவும், இது நடந்திருக்கக் கூடாது எனவும், அந்த நிலையில் தனியாரின் உதவியுடன் அந்தக் கடனை செலுத்த முடியுமாக இருந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஒரு சிலர் இந்த நிலையில் இலங்கைக்கு சார்பாக இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2022 ஏப்ரல் 08 இல் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கருத்தை இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அண்மையில் முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி சட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தினால் சுமார் 70 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, நீண்ட காலமாக ஒரு சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சின் விளைவு எனத் தெரிவித்தார். புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்று முதலாவது தினத்திலே வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இது எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடல் இன்றி மேற்கொள்ளப்பட்ட கடன் மீள செலுத்துவதை கைவிடுவதன் அறிவிப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக, இதன்போது அஜித் நிவாட் கப்ரால் 3 முக்கிய விடயங்கள் பற்றி குறிப்பிட எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய, 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை, வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற விதம் மற்றும் ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியடைதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் போது 2022 ஏப்ரல் 12 இல் நிதி வங்குரோத்து நிலைமையை பிரகடனப்படுத்தியமை நிகழ்ந்த விதத்தை அஜித் நிவாட் கப்ரால் விரிவாக விளக்கியத்துடன் நேரம் போதாமை காரணமாக எதிர்வரும் தினத்தில் ஏனைய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்க அதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கடினமான சூழ்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் தப்பியோடியதாக கருத்தொன்று காணப்படுவதாகவும் அது தொடர்பில் பதிலளிப்பது முக்கியமானது என இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார்.
இதன்போது அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில், 2022.04.03 ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் கூடி அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாகவும், இந்த சந்தர்ப்பத்திற்கு தன்னையும் அழைத்திருந்ததால் தனக்கும் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
எனினும் இதன்போது தப்பியோடுவது இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த விடயம் தொடர்பில் புரிதல் இருப்பது முக்கியமானது என குழுவின் தலைவர் கௌரவ சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திசாநாயக்க, ஜயந்த கெடகொட, பிரதீப் உந்துகொட, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.