நீரிழிவு நோய்க்கு தகுந்த உடற்பயிற்சி எது?

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #சலரோகம் #Diabetics #Hypertension
Mugunthan Mugunthan
8 months ago
நீரிழிவு நோய்க்கு தகுந்த உடற்பயிற்சி எது?

குதிரையேற்றம், மல்யுத்தம், பிற விளையாட்டுகள், நீண்டதூர நடைப்பயிற்சி, கிணறு தோண்டுதல் போன்றவை உடல் எடை அதிகமாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 தற்போதைய அமெரிக்க நீரிழிவு நோய் கூட்டமைப்பும்(AMERICAN DIABETIC ASSOCIATION) முறையான தொடர்ச்சியான உடற்பயிற்சியானது, நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் முக்கிய அங்கம் என்று வலியுறுத்துகிறது. 

 நீரிழிவு நோயாளிகளுக்கு உடற்பயிற்சி ஏன் தேவைப்படுகிறது?

 உடற்பயிற்சி கலோரியை எரித்து ஆற்றலை வெளிப்படுத்துவதால், சரியான அளவிற்கும் அதிகமாக இருக்கும் உடல் எடை குறைவதுடன், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

 தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால், இன்சுலின் அளவு முறையாகப் பராமரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளியின் HBA1c யின் அளவு குறைகிறது. இதனால், கடை நிலையிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பது எளிதாகிறது. 

 அலுவலகத்திற்கு நேரமாகும்போது வேகமாக நடத்தல், பேருந்தைப் பிடிக்க ஓடுதல், ஏதேனும் அதிகப் பளுவான பொருளைத் தூக்கி வேறு இடத்தில் வைத்தல், அவசரமாக வீட்டைத் தூய்மை செய்தல், ஒரு மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக தோட்டவேலை செய்தல் போன்ற குறுகிய நேர உடல் உழைப்பிற்கு அல்லது பயிற்சிக்கு, ஏற்கெனவே உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிளைகோஜன் குளுக்கோஸாக வெளியேற்றப்பட்டு, ஆற்றலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த உடற்பயிற்சி தொடர்ச்சியாக, மிதமான அளவில் நடக்கும்போது குறைந்தபட்சம் 20 மடங்கு அதிகமாக குளுக்கோஸ் எரிக்கப்படுவது நிகழ்கிறது. எனவேதான் அதிகமாக உள்ள ரத்த சர்க்கரையின் அளவு குறைகிறது.

 உடற்பயிற்சியின்போது உடலில் நிகழ்வது என்ன?

 உடற்பயிற்சியை துவங்கிய முதல் 15 நிமிடங்களில் ரத்தத்திலுள்ள சர்க்கரையையும் தசையிலுள்ள கிளைகோஜனையும் எடுத்துக் கொண்டு தசைகள் அசைவுச் செயலுக்கு உட்படுத்தப்படுகின்றன. 

அதிலிருந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு, கல்லீரல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிளைகோஜினிலிருந்து தமக்குத் தேவையான ஆற்றலை, எரிபொருளாக தசைகள் உபயோகப்படுத்திக் கொள்கின்றன.

 உடற்பயிற்சி துவங்கியவுடன், நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் செயல்பாடு இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால், கல்லீரலிலிருந்து அதிகமான குளுக்கோஸ் வெளியேற்றப்பட்டு, கொழுப்பு செல்களில் கொழுப்பு மூலக்கூறுகள் உடைவது அதிகரிக்கப்படுகிறது.

 அடுத்த 30 நிமிடங்கள் முடியும்போது, உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஆற்றலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. மொத்தத்தில், ரத்தத்திலுள்ள சர்க்கரை, தசையிலுள்ள செல்களுக்காக அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக ரத்த சர்க்கரையின் அளவும், கிளைக்கோஜின் சேமிப்பும் உடற்பயிற்சிக்குப் பின்னர் குறைகிறது. 

பயிற்சி முடிந்தவுடன், போதுமான ரத்த சர்க்கரையின் அளவை பராமரிப்பது ஒவ்வொருவருக்கும் மிக எளிமையாகிறது. அதே சமயம், உடற்பயிற்சிக்குப் பின்னர், நமது உடலில் தானாகவே கிளைக்கோஜன் சேமிப்பை தயார் செய்து கொள்கிறது. 

இந்த நிலை, முதல் நான்கு மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒவ்வொருவரின் உடற்பயிற்சியின் வேகம், தன்மை, நேரம் ஆகியவற்றைப் பொருத்து, இந்த சுழற்சி நிலை மாறுபடுகிறது. 

images/content-image/1692868277.jpg

 நீரிழிவை உடற்பயிற்சி எவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது?

 ஆரோக்கியமான ஒரு மனிதன் உணவு உண்ட பின்னர், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, கணையத்திலிருந்து இன்சுலின் வெளியேற்றப்பட்டு, கல்லீரல் மற்றும் தசை நார்களைத் தூண்டி, அதிகப்படியாக இருக்கும் சர்க்கரையை எடுத்துக் கொள்ள கட்டளையிடப்படுகிறது.

 அதனாலேயே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. இது பொதுவாக உடலில் நடக்கும் நிகழ்வாகும். உடற் பயிற்சி செய்யும்போது, இதே நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுவதாலும், அதிக ஆற்றல் தசைகளுக்குத் தேவைப்படுவதாலும், ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து சம நிலைக்கு வருகிறது. 

மேலும், உடற்பயிற்சி தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, ஒவ்வொரு செல் சவ்வும் மிகச் சிறப்பாக வேலை செய்யும் நிலையைக் கொடுக்கிறது. இதற்கு நேர்மறையாக, நீரிழிவு நோயாளிகள் செய்யும் உடற்பயிற்சி ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடுவதும் உண்டு. 

அதற்கு அளிக்கப்பட்ட அழுத்தமாகவும், நெருக்கடியாகவும் நினைத்துக்கொண்டு, "stress hormone’ என்னும் சுரப்பைத் தூண்டிவிட்டு, உடலில் இருக்கும் தசைகளுக்கு எரிபொருள் அளிக்கும் பொருட்டு, சர்க்கரை குளுக்கோஸின் அளவை அதிகரிக்குமாறு கட்டளையிடுகிறது. இந்த நேரத்தில்தான் இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறிதளவு அதிகமான இன்சுலின் தேவைப்படுகிறது.

 எனவே, உடற்பயிற்சி செய்வது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என்றாலும், சில நேரங்களில் அதிகரிக்கவும் செய்யும் என்பதை நினைவில் வைத்து மிதமான பயிற்சிகளை முறையான பயிற்சியாளர்களின் ஆலோசனையுடனும் கண்காணிப்புடனும் பின்பற்ற வேண்டும். 

 மூன்று விதமான உடற்பயிற்சிகளை நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ளலாம் உடலில் ஆக்ஸிஜன் செயல்பாட்டை அதிகரிக்கக் கூடிய "ஏரோபிக்ஸ்' என்னும் உடற்பயிற்சி - இசைக்கு ஏற்றார் போல் வளைந்து நெளிந்து குதித்து சுழன்று ஆடக் கூடிய ஒரு வகையான உடற்பயிற்சி.

 நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் இல்லாத நிலையிலும், முதுமையில்லாத நடுத்தர மற்றும் வாலிப வயதிலிருந்தாலும் இதை மேற்கொள்ளலாம். சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி, ஓட்டம், நீச்சல், குதித்தல் போன்றவை இதே வகையில் அனைவரும் மேற்கொள்ளக் கூடிய மிதமான பயிற்சிகளாகும்.

 உடல் வலுவேற்றப் பயிற்சிகள் - பளு தூக்குதல், உடற்பயிற்சி நிலையங்களில் கருவிகளை உபயோகப்படுத்தி செய்யும் இப்பயிற்சிகள், தசைகளின் குளுக்கோஸை அதிகம் உபயோகப்படுத்திக் கொள்வதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்து சரியான அளவில் பராமரிக்கப்படும்.

 இதனால், இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயிற்சிகள் நன்மையளிக்கும். நளினமான உடற்பயிற்சிகள் - அன்றாடம் செய்யக் கூடிய, உடல் முழுவதையும் இயக்கத்திற்குள்ளாக்கக் கூடிய மிதமான அசைவுகள் கொண்ட உடற்பயிற்சிகள் அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றவை. 

இவை உடலை உறுதி செய்வதுடன், உள்ளுறுப்புகளையும், நாளமில்லா சுரப்பிகளையும் கால் கைகளையும் சீரான இயக்கத்தில் வைக்கிறது. யோகப் பயிற்சிகளும் இதில் அடங்கும்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1692868560.jpg