தடுப்புக்காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு: திருகோணமலையில் ரயர்கள் எரித்து எதிர்ப்பு
திருகோணமலை ஜமாலியா பகுதியை சேர்ந்த ஒருவர் பொலிஸ் தடுப்புகாவலில் இருக்கும் போது இறந்தமைக்கு நீதிகோரி அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் நேற்றிரவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பட்டத்தின் போது திருகோணமலை ஜமாலியா பகுதியில் உள்ள வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டும் நீதி வேண்டும், பொலிஸ் அராஜகம் ஒழிக என்ற கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை - ஜமாலியா, தக்வா நகரை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரியவருகின்றது. ஜமாலியா - கடற்கரை பகுதியில் 21ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பணத்தை திருடியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபரை 22 ஆம் திகதி மாலை தலைமையக பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞர் நேற்று மாலை தலைமையக பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருக்கின்ற மலசல கூடத்திற்குள் தான் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.