நாடு முழுவதும் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மது போத்தல்கள்
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மது போத்தல்களை விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் பதிவாகியுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.
சமகி ஜனபலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வாய்மொழிப் பதில்களை எதிர்பார்த்து கேள்விகளை எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் மது போத்தல்கள் தொடர்பில் தகவல்களை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கிட்டத்தட்ட 6,000 மது போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக கலால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழுவிற்கு கலால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே அது இடம்பெற்றுள்ளது.
மதுபானம் தயாரித்த நிறுவனங்கள், மது விற்பனை செய்த கடைகள், குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை அடங்கிய அறிக்கையை வரும் 31ம்திகதிக்குள் குழுவிடம் தாக்கல் செய்ய கலால் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.