ஆராய்ச்சி கப்பல் ஒன்றை இலங்கையில் நிலைநிறுத்த அனுமதி கோரும் சீனா!
இலங்கையில் ஒரு ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீபமாக இலங்கை வந்த போர் கப்பல்கள் குறித்து இந்தியா பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இவ்வாறான செய்தி வெளியிாகியுள்ளது.
ஷி யான் 6 என்ற கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு பெய்ஜிங் அனுமதி கோரியுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் 60 பேருடன் செயற்படுவதுடன், இதுவொரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலாகும். இது கடல்சார்வியல், கடல் புவியியல் மற்றும் கடல் சூழலியல் சோதனைகளை மேற்கொள்கிறது.
கடந்த ஆண்டு, விண்கலம் கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்ற யுவான் வாங் 5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் கவலைகளை எழுப்பியது.
இதனையடுத்து இலங்கை கடற்பரப்பில் இருக்கும் போது எந்தவொரு ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.