மனைவியை கொன்று காப்பீடு தொகையில் காதலியுடன் வாழ்ந்த நபர்

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பாரடைஸ் வேலி டிரைவ் பகுதியில் பல் மருத்துவராக தொழில் புரிந்து வந்தவர் லேரி ருடால்ஃப்.
இவரது மனைவி பியான்கா ருடால்ஃப். 34 வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், 2016ல் வைல்ட் லைஃப் சஃபாரி எனப்படும் வனவிலங்குகளை அவை வசிக்கும் வனங்களிலேயே வாகனத்தில் அமர்ந்தபடி காணும் சுற்றுலாவிற்காக ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்கு சென்றிருந்தனர்.
சுற்றுலா முடிந்து ஊருக்கு திரும்பும் நாளான அக்டோபர் 11 அன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தனர். அப்போது பியான்கா அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.
தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என ஜாம்பிய காவல்துறையிடம் லேரி கூறினார். இது குறித்து அவர் கூறும் போது, "நான் குளியலறையில் இருந்தேன். ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. நான் உடனே பதற்றத்துடன் வெளியில் வந்து பார்த்தேன்.
அப்போது என் மனைவி தரையில் பிணமாக கிடந்தார். அவர் உடலை சுற்றி எங்கும் ரத்தமாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார். ஜாம்பியா நாட்டு புலனாய்வு அதிகாரிகள், தங்கள் விசாரணையில் பியான்காவின் மரணத்தை தற்கொலை என முடிவு செய்தனர்.
இதனையடுத்து காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு தொகையை முழுமையாக லேரியிடம் வழங்கியது.
ஆனால் பியான்காவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர். பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் வல்லுனர்கள் ஆகியோரின் ஆய்வில் பியான்காவின் இருதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு, 2 அல்லது 3.5 அடி தூரத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டு இறந்திருந்தால் இது போன்ற இடைவெளி வர வாய்ப்பே இல்லை எனவும் முடிவுக்கு வந்தது.
லேரியின் வாக்குமூலத்தை நம்பாத அமெரிக்க மத்திய புலனாய்வு துறை, பல நாடுகளுக்கு சென்று பல சாட்சிகளை விசாரித்து, ஒரு நீண்ட விசாரணையை நடத்தியது. இறுதியாக குற்றம் நடந்த ஐந்த வருட காலம் கழித்து தக்க ஆதாரங்களுடன் லேரியை கைது செய்தது. அவரை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.



