குருந்தூரில் பொங்கலுடன் விகாரையிலும் விசேட வழிபாடு!
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் விழா நடைபெற்றது.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
அதேநேரம் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பொங்கல் நிகழ்வுகளை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கு அமைவாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல்லு வைத்து அதன்மேல் தகரம் வைத்து அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினார்கள்.
ஒரு இடத்திலேயே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.
பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது இதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். மறுபக்கத்தில் பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாளும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இரண்டு பகுதிக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என சுமார் 500 பேர் வரையில் கலந்து கொண்டனர்.
இதேவேளை பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் குறித்த விகாரை மற்றும் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலையையிலான 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான மக்கள் கலந்து கொண்டனர்.