கிளிநொச்சி்யில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் கூட்டம் இன்று நடைபெற்றது!
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாவது காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் இன்று (18.08) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் தலைவருமான ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல், பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில், மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இதன்போது நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட வேண்டிய வியாபார நிலையங்கள், பிரதேச சபைக்கு பாரப்படுத்த வேண்டியவை, தொலைந்த அல்லது உரிமைமாற்ற காணிக் கச்சேரி முன்மொழிவுகள், ஆவணம் வழங்குதல், திணைக்களங்களுக்கு காணி கையளித்தல், பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் காணிகளை கையளித்தல், நீண்டகால குத்தகையில் காணி வழங்குதல், காணிக் கச்சேரி முன்மொழிவிற்கான அனுமதி வழங்குதல் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்றைய மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவு ரீதியாக மொத்தமாக 510 காணிக் கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன. இவற்றுள் 19 காணிக் கோரிக்கை விண்ணப்பங்களின் சிபாரிசுகள் காலதாமதப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் மேலதிக ஆவணங்கள் மற்றும் கள விஜயம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) நளாயினி இன்பராஜ், திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் P.உமையாள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் ரட்ணம் அமீன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், வன வள திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.