வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுப்படுத்த நடவடிக்கை!
வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு வியட்நாம் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் வியட்நாமின் பிரதி ஜனாதிபதி ட்ரான் லு குவாங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் அரச மற்றும் தனியார் துறைகளில் தற்போதுள்ள கூட்டு முயற்சிகளுக்கு மேலதிகமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான புதிய துறைகளை ஆராயுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு வியட்நாம் துணை ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், வியட்நாமில் முதலீடு செய்வதன் மூலம், பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான இலங்கைப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தேயிலை, தென்னை, இறப்பர், கடற்றொழில், மாற்று எரிசக்தி மற்றும் சுரங்கம் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி விவசாயத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான விமானப் பயணத்தை அதிகரிப்பது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவும் என்பதால், புத்த வழிபாட்டுத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்க வியட்நாம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.